Friday, August 15, 2014

கேசவமணி விமர்சனம்

பனிமனிதன் வாசித்தபோது, கனமான காலணிகளுடன் நடந்து பழகிவிட்டு கனமில்லாத காலணிகளை அணிந்தால் நடக்க எப்படிச் சிரமமாக இருக்குமோ அப்படித்தான் இருந்தது. ஆனால் நாம் நம் நிலையிலிருந்து இறங்கி ஒரு சிறுவனாக பாவித்து வாசிக்கும்போது, சிறுவர்களுக்கான ஒரு நாவல் எப்படி இருக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்; முழுமையாக ரசிக்க முடியும். வெறும் சாகஸத்தை மையப்படுத்தும் கதை அல்ல இது. மாறாக அந்த சாகஸத்தினூடே சிறுவர்களுக்கான அறிவைப் புகட்டும் ஏராளமான அறிவியல் செய்திகளை நாவலின் ஒவ்வொரு நிகழ்விலும் வெளிப்படுத்திச் செல்கிறார் ஜெயமோகன். நாவல் நெடுகவே காட்சிகளின் சித்தரிப்புகளிலும், விவரணைகளிலும் அவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு சிறுவர்களுக்கான மொழியில் நாவலை நடத்திச் செல்வது சிறப்பு.

ராணுவ வீரன் பாண்டியன், டாக்டர் திவாகர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கிம் என்ற சிறுவன் மூவரும் பனிமனிதனைத் தேடி பயணம் மேற்கொள்கிறார்கள். வழி நெடுக அவர்கள் காணும் இயற்கையின் விசித்திரமும் விநோதங்களும்தான் கதை. மனிதனின் பரிமாண வளர்ச்சி, டீன் பறவைகள், மண்டை ஓடு, வைரம், வென்னீர் ஊற்று, நெருப்பு நதி, போவா பாம்பு, பனிக் குகை, பறக்கும் ஓணான் என்று அனைத்தையும் அறிவியலின் துணைகொண்டு சிறுவர்களுக்கு எளிமையாக விவரிக்கிறது நாவல். இந்த விநோதங்களும் விசித்திரங்களும் போகப்போக அதிகரித்துக் கொண்டே சென்று அதன் உச்சமான பனிமனிதர்கள் இருக்கும் காட்டில் நம்மைக் கொண்டு சேர்க்கிறது. அங்கே நாம் காணும் விந்தைகள் அவதார் திரைப்படத்திற்கு நிகரான காட்சிகளின் சித்தரிப்பைக் கொண்டிருக்கிறது. நாவலின் முடிவில் அந்த உலகத்தை விட்டுப் பிரிய நமக்கே மனம் வராத போது சிறுவர்கள் அதில் கட்டுண்டு கிடப்பார்கள் என்பது நிச்சயம்.

இவற்றோடு புத்தரை மையப் படுத்தி ஆன்மீகத்தை நாவலினூடாக மிக இயல்பான போக்கில் சொல்லியிருப்பது பாராட்டுக்கு உரியது. சிறுவர்கள் அதை எளிமையாக உள்வாங்கிக் கொள்வார்கள். அப்படி உள்வாங்கும் போது அவர்கள் தங்களைத் தாங்களே அறிந்து கொள்வார்கள். அவைகள் பசுமரத்து ஆணி போல் பதிந்து அவர்களின் வாழ்நாள் முழுதும் பின்தொடர்ந்து வந்து வழிகாட்டும். பெரியவர்களுக்கே விளங்காத மனம், உள்மனம், ஆழ்மனம், துரிய மனம் ஆகியவற்றை பூச்சிகள் மற்றும் பனிமனிதனைக் கொண்டு அற்புதமாக விளக்கியுள்ளார் கதையாசிரியர். உண்மையில் இவ்வளவு எளிமையாக அதை விளக்க முடிந்ததை எண்ணி படிக்கும்போது ஆச்சர்யமும் வியப்பும் ஏற்படுகிறது. இப்படி ஒரு எழுத்தாளர் சிறுவனாக இருந்தபோது நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் படிக்கும் ஒவ்வொரு பெரியவர்களுக்கும் இருக்கும்.

இந்த உலகம் இரு மாறுபட்ட மனிதர்களைக் கொண்டிருக்கிறது. மனிதர்களில் பெரும்பான்மையோர் பணம், புகழ், அதிகாரம் இவற்றில் நாட்டம் கொண்டவர்கள். அவர்களால் வாழ்வின் புதிர்களையும் விநோதங்களையும் அதிசயங்களையும் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. இந்த உலகத்தின் உண்மையான மதிப்பையும் உணராதவர்கள் அவர்கள். ஆனால் இவற்றையெல்லாம் புறக்கணித்து தங்களுக்கான கற்பனை உலகத்தில் சஞ்சாரம் செய்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். இந்த உலகம், அதில் வாழும் மனிதர்கள், சமூக அமைப்பு அனைத்தும் இவர்களுக்கு உவப்பானதாக இருப்பதில்லை. பிறரிடமிருந்து விலகியிருக்க முடியாமல் இந்த உலகத்தோடு ஒட்டிக்கொண்டு வாழ்கிறார்கள். அவர்களுக்கான உலகம்தான் இந்தப் பனிமனிதன். இதிலிருந்து நாவலின் உச்சமாக வெளிப்படும் ‘தனிப்பட்ட மனிதர்களுக்குக் கருணை உண்டு ஆனால் மனித இனத்திற்குக் கருணை இல்லை’ என்ற தரிசனம் முக்கியமானதும் சிந்திக்கத் தக்கதுமாகும்.

பனிமனிதனை நாம் மகத்தான சிறுவர் நூலாகக் கொண்டாடலாம். இந்நாவல் வாசிப்போரின் மனக் கண்ணில் நிகழ்த்திக் காட்டும் அற்புத உலகம் சிறுவர்களுக்கு மட்டும் உரியதாக இல்லாமல் பெரியவர்களுக்கான உலகமாகவும் இருப்பது சிறப்பு. இத்தகைய நூல்களை சிறுவர்கள் வாசிப்பதன் மூலம் சிறந்த வாசகர்களை, எழுத்தாளர்களை உருவாக்கும் சாத்தியம் எதிர்காலத் தலைமுறைக்குப் பிரகாசமாக இருக்கிறது.
- See more at: http://kesavamanitp.blogspot.in/2014/08/blog-post_68.html#sthash.GSoG29NJ.dpuf