Friday, August 15, 2014

கேசவமணி விமர்சனம்

பனிமனிதன் வாசித்தபோது, கனமான காலணிகளுடன் நடந்து பழகிவிட்டு கனமில்லாத காலணிகளை அணிந்தால் நடக்க எப்படிச் சிரமமாக இருக்குமோ அப்படித்தான் இருந்தது. ஆனால் நாம் நம் நிலையிலிருந்து இறங்கி ஒரு சிறுவனாக பாவித்து வாசிக்கும்போது, சிறுவர்களுக்கான ஒரு நாவல் எப்படி இருக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்; முழுமையாக ரசிக்க முடியும். வெறும் சாகஸத்தை மையப்படுத்தும் கதை அல்ல இது. மாறாக அந்த சாகஸத்தினூடே சிறுவர்களுக்கான அறிவைப் புகட்டும் ஏராளமான அறிவியல் செய்திகளை நாவலின் ஒவ்வொரு நிகழ்விலும் வெளிப்படுத்திச் செல்கிறார் ஜெயமோகன். நாவல் நெடுகவே காட்சிகளின் சித்தரிப்புகளிலும், விவரணைகளிலும் அவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு சிறுவர்களுக்கான மொழியில் நாவலை நடத்திச் செல்வது சிறப்பு.

ராணுவ வீரன் பாண்டியன், டாக்டர் திவாகர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கிம் என்ற சிறுவன் மூவரும் பனிமனிதனைத் தேடி பயணம் மேற்கொள்கிறார்கள். வழி நெடுக அவர்கள் காணும் இயற்கையின் விசித்திரமும் விநோதங்களும்தான் கதை. மனிதனின் பரிமாண வளர்ச்சி, டீன் பறவைகள், மண்டை ஓடு, வைரம், வென்னீர் ஊற்று, நெருப்பு நதி, போவா பாம்பு, பனிக் குகை, பறக்கும் ஓணான் என்று அனைத்தையும் அறிவியலின் துணைகொண்டு சிறுவர்களுக்கு எளிமையாக விவரிக்கிறது நாவல். இந்த விநோதங்களும் விசித்திரங்களும் போகப்போக அதிகரித்துக் கொண்டே சென்று அதன் உச்சமான பனிமனிதர்கள் இருக்கும் காட்டில் நம்மைக் கொண்டு சேர்க்கிறது. அங்கே நாம் காணும் விந்தைகள் அவதார் திரைப்படத்திற்கு நிகரான காட்சிகளின் சித்தரிப்பைக் கொண்டிருக்கிறது. நாவலின் முடிவில் அந்த உலகத்தை விட்டுப் பிரிய நமக்கே மனம் வராத போது சிறுவர்கள் அதில் கட்டுண்டு கிடப்பார்கள் என்பது நிச்சயம்.

இவற்றோடு புத்தரை மையப் படுத்தி ஆன்மீகத்தை நாவலினூடாக மிக இயல்பான போக்கில் சொல்லியிருப்பது பாராட்டுக்கு உரியது. சிறுவர்கள் அதை எளிமையாக உள்வாங்கிக் கொள்வார்கள். அப்படி உள்வாங்கும் போது அவர்கள் தங்களைத் தாங்களே அறிந்து கொள்வார்கள். அவைகள் பசுமரத்து ஆணி போல் பதிந்து அவர்களின் வாழ்நாள் முழுதும் பின்தொடர்ந்து வந்து வழிகாட்டும். பெரியவர்களுக்கே விளங்காத மனம், உள்மனம், ஆழ்மனம், துரிய மனம் ஆகியவற்றை பூச்சிகள் மற்றும் பனிமனிதனைக் கொண்டு அற்புதமாக விளக்கியுள்ளார் கதையாசிரியர். உண்மையில் இவ்வளவு எளிமையாக அதை விளக்க முடிந்ததை எண்ணி படிக்கும்போது ஆச்சர்யமும் வியப்பும் ஏற்படுகிறது. இப்படி ஒரு எழுத்தாளர் சிறுவனாக இருந்தபோது நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் படிக்கும் ஒவ்வொரு பெரியவர்களுக்கும் இருக்கும்.

இந்த உலகம் இரு மாறுபட்ட மனிதர்களைக் கொண்டிருக்கிறது. மனிதர்களில் பெரும்பான்மையோர் பணம், புகழ், அதிகாரம் இவற்றில் நாட்டம் கொண்டவர்கள். அவர்களால் வாழ்வின் புதிர்களையும் விநோதங்களையும் அதிசயங்களையும் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. இந்த உலகத்தின் உண்மையான மதிப்பையும் உணராதவர்கள் அவர்கள். ஆனால் இவற்றையெல்லாம் புறக்கணித்து தங்களுக்கான கற்பனை உலகத்தில் சஞ்சாரம் செய்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். இந்த உலகம், அதில் வாழும் மனிதர்கள், சமூக அமைப்பு அனைத்தும் இவர்களுக்கு உவப்பானதாக இருப்பதில்லை. பிறரிடமிருந்து விலகியிருக்க முடியாமல் இந்த உலகத்தோடு ஒட்டிக்கொண்டு வாழ்கிறார்கள். அவர்களுக்கான உலகம்தான் இந்தப் பனிமனிதன். இதிலிருந்து நாவலின் உச்சமாக வெளிப்படும் ‘தனிப்பட்ட மனிதர்களுக்குக் கருணை உண்டு ஆனால் மனித இனத்திற்குக் கருணை இல்லை’ என்ற தரிசனம் முக்கியமானதும் சிந்திக்கத் தக்கதுமாகும்.

பனிமனிதனை நாம் மகத்தான சிறுவர் நூலாகக் கொண்டாடலாம். இந்நாவல் வாசிப்போரின் மனக் கண்ணில் நிகழ்த்திக் காட்டும் அற்புத உலகம் சிறுவர்களுக்கு மட்டும் உரியதாக இல்லாமல் பெரியவர்களுக்கான உலகமாகவும் இருப்பது சிறப்பு. இத்தகைய நூல்களை சிறுவர்கள் வாசிப்பதன் மூலம் சிறந்த வாசகர்களை, எழுத்தாளர்களை உருவாக்கும் சாத்தியம் எதிர்காலத் தலைமுறைக்குப் பிரகாசமாக இருக்கிறது.
- See more at: http://kesavamanitp.blogspot.in/2014/08/blog-post_68.html#sthash.GSoG29NJ.dpuf

Thursday, July 17, 2014

புத்தர் புரியும் புன்னகை


லடாக் பீட பூமிக்கு வடக்கே, கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்திலிருக்கும் தேப்சாங் பள்ளத்தாக்கில் ரோந்து செல்லும் ராணுவ வீரர்கள், வெண் பனியில் பதிந்திருக்கும் ராட்சத காலடித் தடங்களைக் கண்டு கொள்கிறார்கள். இந்தக் காலடித் தடங்களை போட்டோ பிடிக்கும் அவ்வீரர்கள் அதனை தமது ராணுவ மேலிடத்திடம் அனுப்பி வைக்கிறார்கள்.

கடந்த காலங்களில் பல முறை இது போன்ற பனியில் பதிந்த ராட்சதக் காலடித் தடங்களை இந்திய ராணுவத்தினர் அவதானித்திருக்கிறார்கள். அக்காலடித் தடங்கள் பதினேழு தடவைகள் புகைப்படங்களாகவும் எடுக்கப்பட்டிருக்கின்றன. இமய மலைப் பகுதிகளில் வாழும் பனி மனிதனின் காலடித்தடமாக இது இருக்கலாம் எனக் கருதப்பட்டாலும் விஞ்ஞானிகள் இவை பனியில் இயற்கையாக ஏற்படும் குழிகள் எனக் கூறுகிறார்கள்.

லடாக்கின் ராணுவத் தலைமையகத்தின் பிரிகேடியர் கே.கே. நாயர், இந்த விடயம் குறித்த ரகசிய விசாரணை ஒன்றை மேற் கொள்ளும்படி ராணுவ வீரன் மேஜர் பாண்டியனைப் பணிக்கிறார்.

விசாரணைகளை ஆரம்பிக்கு முன்பாக சில தகவல்களை அறிந்து கொள்ள பாண்டியன் விரும்புகிறான். ராணுவ ஆராய்ச்சிப் பிரிவு அவனிற்கு வழங்கிய தகவல்கள் பயனளிக்காத நிலையில் டாக்டர் திவாகர் என்பவரைச் சந்தித்து தனக்கு வேண்டிய தகவல்களை பெற்றுக் கொள்ள அவன் தீர்மானிக்கிறான்.


டாக்டர் திவாகர் ஒரு மானுடவியலாளர். இமய மலையில் உள்ள மனிதர்களைப் பற்றிய ஆராய்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். அவர் டா பிங் எனும் மலைக் கிராமத்தில் வசித்து வருவதால் அக்கிராமத்தை நோக்கி வழிகாட்டி ஒருவனுடன் தன் பயணத்தை ஆரம்பிக்கிறான் பாண்டியன்.


டா பிங் கிராமத்தை நோக்கி செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமத்தின் ஆதி குடிகள், தம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் கிம் சுங்கை மலைத் தேவதைகளின் பலீ பீடத்தில் உயிரோடு காணிக்கையாக செலுத்துகிறார்கள். சிறுவன் கிம் சுங்கிற்கு கடுமையான காய்ச்சல் கண்டிருக்கிறது. பலி பீடத்தில் கிடத்தப்பட்ட சிறுவனின் உடலைக் குறிவைத்து பெரும் கழுகுகள் வானிலிருந்து கீழே இறங்க ஆரம்பிக்கின்றன. சிறுவன் கிம் சுங்கின் நிலையைக் கண்டு பதறும் பாண்டியன், சிறுவனைக் கிராம மக்களிற்கு தெரியாது காப்பாற்றுகிறான். டா பிங் கிராமத்திற்கு மயங்கிய நிலையிலிருக்கும் சிறுவன் கிம் சுங்கை தன்னுடன் எடுத்துச் செல்கிறான்.


மலையின் இருளில் வழி தெரியாது சில கணம் தடுமாறும் பாண்டியனின் வழிகாட்டி, காற்றில் கலந்து வரும் தேவதாரு மரத்தின் புகையை மோப்பம் பிடித்து டா பிங் கிராமத்திற்கு அவர்களை இட்டுச் செல்கிறான். கிராமத்தில் நுழையும் பாண்டியன் டாக்டர் திவாகரைச் சந்திக்கிறான். டாக்டர் திவாகர் காய்சலில் வாடும் சிறுவன் கிம் சுங்கிற்கு சிகிச்சை அளிக்கிறார்.
yeti_footprint 
மறுநாள் காலை டாக்டர் திவாகருடன் உரையாடும் பாண்டியன், டாக்டர் மலையில் வாழும் மக்கள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டாலும் பனி மனிதன் குறித்த தேடல்களிலும் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பதை அறிந்து கொள்கிறான். டாக்டர் திவாகரைப் பொறுத்த வரை பனிமனிதன் மீதான அவரது ஆராய்ச்சி என்பது உண்மையில் மனிதர்கள் மீதான ஆராய்ச்சியாகவே இருக்கிறது. மேலும் பனிமலையில் வழி தவறிப் போன சிறுவர்களை பனி மனிதன் காப்பாற்றி வருகிறான் என்ற தகவலையும் அவர் பாண்டியனிற்கு கூறுகிறார். இது பாண்டியனிற்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது.


இந்த வேளை டா பிங் கிராமத்தை நோக்கி ஓநாய்கள் கூட்டம் ஒன்று வந்து கொண்டிருப்பதை டீன் பறவைகள் கிராமத்தவர்களிற்கு அறியத் தருகின்றன [ ஏன் என்பதை கதையில் படித்து அறிந்து கொள்ளுங்கள்], ஓநாய்க் கூட்டத்தின் தாக்குதலை முறியடிக்க விரும்பும் கிராமத்தவர்கள், ஓநாய்கள் வரும் பாதையில் பாறைகளில் வெடி ஒன்றை வெடிக்க வைத்து ஓநாய்க் கூட்டத்தை விரட்டியடிக்கிறார்கள். இந்தக் களேபேரங்கள் முடிவடைந்த வேளையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் கிம் சுங், குரங்கு மனிதன் என்னைப் பிடிக்கிறான் என அலறியவாறே திடுக்கிட்டு எழுகிறான்.

டாக்டர் திவாகரும், பாண்டியனும் சிறுவன் கிம் சுங்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள், ஆடு மேய்ப்பதற்காக சென்ற வேளையில் தனக்கு காய்ச்சல் உண்டாகி நடக்க முடியாமல் 
போனதெனவும், தன்னை தன் தந்தையும் தனியே கைவிட்டு வந்த வேளையில் குரங்கு மனிதன் தன்னைத் தூக்கிக் கொண்டு சென்ற சம்பவத்தையும் சிறுவன் கிம் சுங் அவர்களிடம் கூறுகிறான். குரங்கு மனிதன் தன்னைத் தூக்கிச் சென்ற வேளையில் ஒரு தருணத்தில் மயக்கமடைந்த அவன் இப்போதுதான் மயக்கம் தெளிவதாகவும் அவன் தெரிவிக்கிறான்.

அது மட்டுமல்ல குரங்கு மனிதன் தன்னை தூக்கிச் சென்ற பாதையை அவர்களிற்கு தான் காட்ட முடியும் எனவும் கிம் சுங் அறிவிக்க, அடுத்த நாளே டாக்டர் திவாகரும், பாண்டியனும் சிறுவன் கிம் சுங்குடன் பனி மனிதனைத் தேடி தம் பயணத்தை ஆரம்பிக்கின்றனர்…

குளிர் அதன் உச்சத்தில் குதூகலிக்கும், இயற்கை தன் ஜால வித்தைகளை நிகழ்த்தும், ஆபத்தும், அபாயமும் உங்கள் ஒவ்வொரு அசைவுகளையும் கூர்ந்து அவதானிக்கும் பனிமலைப் பாதைகளினூடாக, சாகசப் பயணமொன்றிற்கு பனி மனிதன் எனும் தன் நாவல் வழியாக அழைப்பு விடுக்கிறார் நாவலாசிரியர் ஜெயமோகன்.

அறிவியல், ஆன்மீகம், இயற்கை என நாவல் எங்கிலும் தெளிவான விளக்கங்களுடன், சிறப்பான தகவல்களை வழங்கி அவர் கதையை சுவையாகக் கூறிச் செல்கிறார். பனி மனிதனைத் தேடி ஆரம்பமாகும் பயணமானது, மனிதன் இயற்கையுடன் கொடூரமாக அறுத்து எறிந்திருக்கும் தன் தொப்புள் கொடி உறவு குறித்து வேதனையோடு பகிர்ந்து கொள்கிறது. இதற்குக் காரணமாகவிருந்த மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்துக் கேள்விகளை முன் வைக்கிறது.
nepal_headerfull 
மேலோட்டமாக தகவல்களை வழங்கி விட்டு நகர்ந்து விடாது, நல்லதொரு ஆசானைப்போல் பல விடயங்கள் குறித்தும் தன் தெளிவான விபரிப்பால் வாசகனின் ஆர்வத்திற்கு திகட்டாத ஒரு விருந்தை படைத்திருக்கிறார் ஆசிரியர்.

சாகசப் பயணத்தில் ஈடுபடும் டாக்டர் திவாகர், வழியில் நிகழும் சம்பவங்களை அறிவியல் ரீதியாக விளக்க முனைகிறார். சிறுவன் கிம் சுங்கோ, அவன் பெற்றிருக்கும் புத்த மடாலயப் போதனைகள் வழி அச்சம்பவங்களை மொழி பெயர்க்க வி
ழைகிறான். ராணுவ வீரன் பாண்டியனோ அறிவியல், ஆன்மிகம் இவை இரண்டிற்குமிடையில் பயணித்துச் செல்பவனாக இருக்கிறான். என்னைப் போன்ற வாசகனின் பயணம் பாண்டியனின் பயணத்தை ஒத்ததே.


சாகசத்தின் இறுதிப் பகுதியானது மனிதனின் நான் எனும் உணர்வைக் குறித்த சிந்தனைகளை வாசகனிடம் எழுப்புகிறது. கூட்டு ஆழ் மனம் மூலம் இயங்கக் கூடிய ஒர் உயிர் சூழலின் சாத்தியத்தையும், அதன் தேவையையும், வாசகன் முன் அந்த உயிர் சூழலின் அற்புதங்களுடன் பரிமாறுகிறது.


இயற்கையும், அதில் இருக்கக் கூடிய எல்லா உயிர்களும் ஒரே மனம் கொண்டவையாக இருந்தால் அந்த உலகம் எவ்வாறு இருக்கும், அந்த உலகில் பரிணாமத்தின் வேகம் எப்படியாக இருக்கும், அங்கிருக்கும் மனிதர்கள் எதில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள், அவர்கள் பேசும் மொழி என்னவாகவிருக்கும், அந்த சூழலில் தீமை என்பது என்ன போன்றவற்றை ஒரு விசித்திர உலகின் மூலம் வாசகன் முன் விரிக்கிறார் நாவலாசிரியர்.
pm2 

சிறுவர்களாக இருந்தபோது இக்கதையைப் படித்தவர்களிற்கு அதில் வரும் ஆன்மீகம் தத்துவம் என்பன எவ்வளவு தூரம் ஆர்வம் தந்திருக்கும் என்பது ஆச்சர்யமே. ஆனால் கதையில் வரும் சாகசமும், விந்தைகளும் அவர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கும் என்றே எண்ணுகிறேன். மாறாக கதையின் ஆன்மிகமும் தத்துவமும் என்னைப் போன்ற வளர்ந்த குழந்தைகளை அணைத்துக் கொள்கிறது.
அறிவியல் ரீதியாக பனி மனிதன் இருப்பு குறித்து அறிய முயலும் கதையில், சிவபுராணத்திலும், ரிக் வேதத்திலும் அவர்கள் குறித்து குறிப்புக்கள் கணப்படுகின்றன என்பது தெரியவரும்போது ஆச்சர்யம் எகிறுகிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் சிறிய பெட்டித் துணுக்குகளாக ஏராளமான பயனுள்ள தகவல்களை தந்து அவற்றைக் கதையில் சொல்லப்படும் விடயங்களுடன் இணைத்திருக்கும் பாணி சிறப்பாக இருக்கிறது. தமிழ் சிறுவர் நாவல் ஒன்றில் நாவலாசிரியரின் இவ்வளவு நேர்மையான அர்பணிப்பை காண்பது அரிதான ஒன்று என்றே நான் எண்ணுகிறேன்.


பனிமலைப் பகுதியில் பூரண நிலவு எழும் அந்த சொர்க்கத்திற்கு ஒப்பான காட்சியை ஜெயமோகன் தன் வார்த்தைகளால் வர்ணிக்க, அக்காட்சி அப்படியே வாசகனுள் உயிர் பெறுவது அபாரமானது.

ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் தெளிவான, விறுவிறுப்பான கதை சொல்லல் மூலம் அருமையான தகவல்களை அள்ளி வழங்கி சிறப்பான ஒரு வாசிப்பனுபவத்தை தரும் நாவலாகவே பனி மனிதன் அமைகிறது. பனிமலைச் சிகரங்களின் உச்சிகளில், அஸ்தமனத்துச் சூரியனின் கதிர்கள் பட்டுத் தெறித்து அப்பிரதேசத்தையே செந்தீயாலான வெளியாக மாற்றியடிக்கிறது. மனதை மயக்கும் இந்நிகழ்வை புத்தரின் புன்னகை என ஒப்பிடுகிறான் சிறுவன் கிம் சுங். அந்தப் புன்னகையை எங்கள் மனதிற்குள்ளும் எடுத்து வருகிறது ஜெயமோகனின் பனி மனிதன். [***]

12 comments:

  1. காதலரே,

    ஜெயமோகனின் எழுத்துகளில் இருக்கும் வசீகரத்தை பற்றி நண்பர்க்ள் கூறிய போது கூட நான் பரிபூரணமாக உணரவில்லை. ஆனால், பனிமனிதன் அந்த எழுத்துகளுக்கு உண்டான சக்தியை ஆத்மார்த்தமாக அனுபவிக்க வைத்து விட்டது என்றே சொல்லாம்.

    இன்று உலகத்தில் இருக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம், மூல காரணத்தை கண்டுபிடிக்கும்போது, அது இயற்கையுடன் மனிதன் நடத்தும் போராட்டத்திற்கு கிடைத்த பரிசு என்று தான் அறிய பெருவதாக, அறிவியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அதை மனதளவில் என்னையும் உணரவைத்த ஒரு நாவல் "பனி மனிதன்".

    கதையின்ஒவ்வொரு கட்டத்திலும் பாண்டியன் மற்றும் டாக்டருக்கு இடையில் நடக்கும் தர்க்க ரீதியான வாதங்கள், வாழ்வில் நாம் தொலைத்து விட்ட எத்தனையோ அற்புதங்களை நமக்கு திரும்பவும் அறிமுக படுத்துகிறது. கூடவே, தான் கூறும் அனைத்து கதை கருக்களுக்கும், அறிவியல் ரீதியான விளக்கம், மற்றும் சரித்திர மேற்கோளை இட்டு ஜெயமோகன் இந்த நாவலை ஆத்மார்த்தமாக வடித்திருக்கிறார்.

    இந்த கதையை அவர் வார நாளிதழ் ஒன்றிற்காக எழுதினார் என்றும், அது கடைசியில் முடிவடையாமல் நின்று போனதையும் அவர் விவரிக்கும் கட்டங்களில், இத்தகைய அற்புத கதைகரு புத்தக வடிவில் கிடைப்பது பெருமிதம் கொள்ள செய்கிறது. இருப்பு தீர்ந்து போன ஒரு இதழை, மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் கிழக்கு பதிப்பகத்திற்கு அதற்கு ஒரு பாராட்டை கண்டிப்பாக கொடுக்கலாம். என்ன இப்படிபட்ட அருமையான விவரிப்புகள் அடங்கிய இந்த எழுத்து நாவலுக்கு, சற்று பிரம்மாண்டமான ஓவியங்களை அவர்க்ள் சேர்த்திருந்தால், அது மகுடம் வைத்தாற் போல இருந்திருக்கும். ஆனால், ஜெயமோகனின் இயற்கை வர்ணிப்புகளை, சித்திரங்களில் கொண்டு வர, எந்த ஒரு ஓவியருக்கும் கைவந்திருக்குமா என்பது யோசிக்க வேண்டிய விடயம் தான்.

    இந்த புத்தகத்தின் சொற்நடை குழையாத அருமையான விமர்சனம். சித்திர நாவல் பிரியர்கள், மற்றும் சிறுவர் (நமக்குள் இருக்கும் குழந்தைக்கும்) இலக்கிய ரசிகர்களுக்கு இந்த நாவல் ஒரு சரியான படிப்பானுபவத்தை கொடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த புத்தகத்தை எனக்கு அறிமுகபடுத்திய நண்பர் ஜோஷுக்கு, நன்றி.
    Reply
  2. ரஃபிக், அவரின் எழுத்தில் தனியான ஒரு வசீகரம் உண்டு என்பது உண்மையே. பனி மனிதனின் சிறப்பு அதன் தெளிவான கதை சொல்லல்.

    இயற்கை குறித்துp பார்த்தால் அதன் அழிவு மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு தந்த விலையாகிவிடுகிறது. இதனையே நாவலில் ஆசிரியர் அழகாக இயற்கையை அழித்துதான் மனிதனால் வாழ முடியும், அவன் அப்படிப் பழகி விட்டான் என்று திவாகர் வழி கூற வைக்கிறார்.

    கதையில் வரும் பெரும்பாலான நிகழ்வுகளிற்கு ஆசிரியர் தரும் ஆதாரங்கள் இக்கதையை ஒரு சிறிய கலைக் களஞ்சியம் ஆக்கி விடுகின்றன.

    அவதார் திரைப்படத்திற்கும் கதையில் வரும் சில சம்பவங்களிற்கும் உள்ள ஒற்றுமைகள் வியப்பை ஏற்படுத்தியது. பனிமனிதனைக் கூட ஒரு மகானின் அவதாரமாக இறுதியில் கற்பனை செய்திருப்பார் ஆசிரியர்.

    கதையில் வரும் சித்திரங்களைக் கிழக்கு பயன்படுத்தாமலே இருந்திருக்கலாம். கதையை மறுபதிப்பாக சிறப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். நண்பர் ஜோஸ்தான் என்னையும் படிக்கும்படி தூண்டினார். அவரிற்கு சொல்ல வேண்டிய நன்றிகுப் பதிலாகவே இப்பதிவு :)

    தங்களின் விரிவான மனம் திறந்த கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே. நாவல் குறித்த உங்கள் பதிவிற்காக காத்திருக்கிறோம் :)
    Reply
  3. நண்பரே மிக அருமையாக சொல்லி படிக்கும் ஆவலை தூண்டிவிட்டீர்கள்,ஜெமோ காட்சிகளை வார்த்தைகளால் வர்ணிக்கும் கலையில் வித்தகர்.நாமும் அங்கேயே உலவுவதை போல செய்வார்.இவரின் காடு நாவல் அடிக்கையில் நானும் பெரிய காட்டுக்குள் அலைந்ததுபோன்ற ஃபீலை தந்தார்.
    அதிலும் இவரின் படைப்புகளில் வரும் கதாபாத்திரங்கள்.அவர்களுக்கு நம்மை விசிறியாக்கிவிடுவார். அப்படி ஒருவர் காடு நாவலில் குட்டப்பன்.எழாம் உலகத்தில்=போத்தியம்பதி.
    பின்னூட்டத்தி முடிக்க மனமில்லை,வேலைக்கு செல்கிறேன்.
    Reply
  4. காதலரே,
    நல்ல புத்தகத்தை பிரந்துரை செய்திருக்கிறீர்கள்... நான் மிகவும் மலைத்துப் படித்த புத்தகங்களில் இந்த 'பனிமனிதனு'ம் ஒன்று...

    எனது நண்பர் ஒருவர் (அவ்வளவாக புத்தகம் வாசிப்பவரில்லை) BIG FOOT போன்ற MYSTERIESலிருந்த ஆர்வத்தில் இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை பார்த்ததும் வாங்கிவிட்டார். இதை படிக்க ஆரம்பித்தவர், திரு.ஜெயமோகன் அவர்களின் எழுத்தில் ஈர்க்கப்பட்டு, இப்போது தொடர்ந்து பல புக்கதங்களை தேடிப்படிக்கும் புத்தகப்புழுவாகிவிட்டார்... இது போல் பலரை வாசகனாக்கிய புண்ணியம், திரு. ஜெயமோகன் அவர்களின் எழுத்துமந்திரதுக்கே உரித்தது...

    உங்களது இந்த இடுகை, புத்தகத்தை மீண்டும் படிக்க ஆவலைத் தூண்டும்படி அமைந்துள்ளது சிறப்பு...

    -
    DREAMER
    Reply
  5. நண்பர் கார்திகேயன், காடு எனக்கும் பிடித்த நாவல்தான். அது எனக்களித்த உணர்வுகளை எழுதிக் கொண்டே செல்லலாம். ஏழாம் உலகம் நாவல் காட்டிலிருந்து வேறுபட்டிருக்கும். காடு எம் மனதில் நாம் ஒளித்து வைத்திருக்கும் ஒரு அந்தரங்க வனத்திற்குள் எம்மை அழைத்துச் சென்று அலையவிடும், எழாம் உலகம் மிகவும் வன்மையான ஒரு உலகிற்குள் எம்மை இட்டுச் செல்லும். உங்கள் வேலை நாள் இனிமையாகக் கழிந்திருக்கும் என்றே எண்ணுகிறேன். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    Dreamer, நானும்தான் பிரம்மித்து விட்டேன். சிறுவர் நாவல்தானே என்றுதான் ஆரம்பித்தேன் ஆனால் ஜெ பின்னியிருக்கிறார். ஜெ இதன் தொடர்ச்சியை விரிவான ஒரு நாவலாக எழுதினால் நான் மிக மகிழ்சியடைவேன். உங்கள் வருகைக்கும் கனிவான கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.
    Reply
  6. அன்பு நண்பரே,

    எதிர்பார்க்காத இந்த விமர்சனம் மிகுந்த மகிழ்ச்சியை எனக்களித்தது. ஜெயமோகன் சிறுவர் இலக்கியத்திற்கு இன்னும் நிறைய தன்னுடைய பங்களிப்பை அளிக்க வேண்டுமென்பது என்னுடைய அவா.

    சித்திரக் கதைகள் இந்திய பாணியில் உருவாக வேண்டுமென்றால் வலுவான கதை முக்கியம். இவரைப் போல சிலர் இத்துறையில் தங்களுடைய பங்களிப்பை அளித்தால் ஐரோப்பிய சித்திரக் கதை சாம்ராஜ்யத்திற்கு வலுவான போட்டியை நாமும் கொடுக்க முடியும். நம்மிடம் மிகச் சிறந்த ஒவியர்கள் இருக்கின்றார்கள். கதாசிரியர்கள்தான் குறைவு.

    இக்கதை சித்திரக் கதையாக வருவதற்கு தகுதியான கதை. ஒருகணம் ஆசிரியர் சொற்களில் வடித்த வடிவங்களை சித்திரங்களில் காண நேர்ந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்த்தேன்.

    ஒரு சிறிய குறை என சொன்னால், கிழக்கு பதிப்பகத்தின் மூலமாக வந்த இந்நூல் மற்ற புத்தகங்களை விட விலை அதிகமாக உள்ளது என்பது என் கருத்து. இது குறித்து இருவேறு கருத்துகள் இருக்கலாம் என்றாலும் , நிறைய பேருக்கு போய் சேரும் என்ற நிலையில் விலை ஒரு முக்கிய காரணி என கருதுகிறேன்.

    மிக அற்புதமான சிறுவர் இலக்கியத்திற்கு சிறந்த அறிமுகம்.
    Reply
  7. மிக அருமை.. கண்டிப்பாக படிக்கிறேன்.. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே..
    Reply
  8. ஜோஸ், தொலைக்காட்சி தொடர் ஒன்றிற்காக எழுதிய கதையை சில வேளைகளில் அவர் நாவலாக்கக்கூடும் என்று அறிவித்திருக்கிறார், பார்க்கலாம். இக்கதை சித்திரக்கதையாக வருவதற்குரிய முழுத்தகுதியும் பெற்றிருக்கிறது. நடைமுறையில் அதனை சாதிக்கமுடியுமா என்பதே கேள்வி. பதிப்பகங்கள் புத்தகங்களின் விலையை குறைப்பது என்பது இனி நிகழப் போகாத ஒன்று. அவர்கள் கழிவு தரும்போது வாங்கிக் கொண்டால்தான் உண்டு. எனக்கு அதுவும் கிடையாது :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    நண்பர் பாலாஜி, கண்டிப்பாகப் படியுங்கள். வருகைக்கும், கருத்துப் பதிந்து சென்றமைக்கும் நன்றி நண்பரே.
    Reply
  9. நண்பரே
    முதலில் மிகப்பெரிய வாழ்த்துகளை சொல்லிவிடுகிறேன். நாவல் பற்றி - அதுவும் தமிழ் நாவல்பற்றி - அதுவும் ஜெயமோகன் நாவல்பற்றி என்ற போது மகிழ்ச்சியுடனும் நெருக்கமாயும் உணர்ந்தேன். நான் படித்தபோது ஏற்பட்ட அதே தாக்கத்தை இந்த பதிவும் ஏற்படுத்தியது. வழமையான அதுவும் நேர்த்தியுடன் இருக்கிறது உங்களின் புத்தக பார்வை. முதல் பக்கத்தில் தொடங்கும் விறுவிறுப்பு முடிவுவரை தொடரும். அதே சமயத்தில் இயல்பாய் பல தகவல்கள் நமக்குள் பரிமாறப்படும். இதற்க்கு ஜெயமோகனே காரணம். இவரின் 'காடு' தொகுப்பு மிகச்சிறந்த ஒன்று. தொடருங்கள்.... இன்ப அதிர்ச்சி கொடுக்க...
    Reply
  10. நண்பர் வேல்கண்ணன், வாழ்த்துக்களிற்கு நன்றி. காடு அருமையான நாவல் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. என் மனம் கவரும் தமிழ் புத்தகங்கள் குறித்தும் என் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறேன். தங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
    Reply
  11. நண்பரே, ஒரு வழியாக பனி மனிதனை ஆன்லைனில் வாங்கிவிட்டேன். இன்று தான் வந்தது. படித்து விட்டு சொல்கிறேன்...
    Reply
  12. நண்பர் பேபி ஆனந்தன், நன்று நன்று, படித்துவிட்டு தயவு செய்து உங்கள் உணர்வுகளை இங்கு பகிர்ந்து கொள்வீர்களாயின் - அது எதிர்மறையான கருத்துக்களாக இருந்தால் கூட- நான் மகிழ்ச்சியடைவேன், தங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பரே.
    Reply



http://kanuvukalinkathalan.blogspot.in/2010/03/blog-post_23.html

ரெங்கசுப்ரமணி விமர்சனம்

பனிமனிதன் - ஜெயமோகன்


புத்தகம் படிக்கும் வழக்கம் எப்படி ஆரம்பித்தது என்று யோசித்து பார்த்தால், தினமலர் சிறுவர்மலல் ஆரம்பித்தது. பலமுக மன்னன் ஜோ, சோனி பையன், லக்கி (மறந்துவிட்டது, படம் வரைந்தால் அது நிஜமாக மாறும்), ஜாக்பாட் ஜாக்கி, இன்னும் பல கேரக்டர்கள். பின்னால் காமிக்ஸ், கோகுலம், அம்புலிமாமா, பூந்தளிர் என்று முன்னேற்றம்.

இருபது வருடங்களுக்கு முன்பு காணப்பட்ட அப்புத்தகங்கள், கேரெக்டர்கள் எல்லாம் இப்போது மறைந்து வருவதைக் கண்டு வருத்தமாக உள்ளது. என் குழந்தைகள் எதைப் படிக்கும் என்று வருத்தம் ஏற்படுகின்றது. குழந்தைகளுக்கான புத்தகங்கள் இன்னும் வருகின்றனவா என்று தெரியவில்லை.

நன்றாக மீண்டும் யோசித்துப் பார்த்தால் புத்தகங்கள் மேல் ஒரு ஆர்வம வர மற்றும் ஒரு முக்கிய காரணம், சிறு வயது முதல் கேட்ட கதைகள். பக்கத்து வீட்டு பாட்டி சொன்ன கதைகள், துருவன் கதை, குசேலன் கதை, தியாகராஜர் கதை, ராமதாசர் கதை, பாரதக் கதைகள். சிறுவயதில் கேட்ட அக்கதைகள் தான் பின்னால் புத்தகங்கள் படிக்க காரணம். கதைகள் கேட்க கேட்க கற்பனை உலகம் திறக்கின்றது.

பெரும்பாலான குழந்தைகள் கதைகள் முழுவது சாகசக் கதைகளாகத்தான் இருக்கின்றன. குழந்தைகளின் கற்பனைத்திறன் என்பது பெரியவர்களை விட கண்டிப்பாக அதிகம். அவர்களின் கற்பனை உலகில் எவ்வித தடைகளும் இல்லை, தர்க்க நியாயங்களும் இல்லை. எல்லையில்லாதது. பெரியவர்களின் கற்பனை அவர்களின் படிப்பு, அனுபவத்தால் குறைப்பட்டது. பஞ்சதந்திரக் கதைகள் போன்றவை சாகசத்துடன் ஒரு நீதியையும் குழந்தைகளுக்கு கற்பிக்கின்றது. தத்துவங்களை குழந்தைகள் மேல் திணிக்க முடியாது, அறிமுகப்படுத்தலாம்.


பனிமனிதன் சாகசம், நீதி, கற்பனை, தத்துவம் என்று அனைத்தையும் கலந்து குழந்தைகளுக்காக எழுதப்பட்ட கதை. ஜெயமோகனின் மற்ற கதைகள் அனைத்தும் படு சீரியசானவை, பெரியவர்களுக்கானவை. அவரால் குழந்தைகளுக்கும் எழுத முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றார். நல்ல கதை சொல்லி குழந்தைகளை கவர்ந்துவிடுவான்.

கதை அலங்காரச் சொற்களால் குழப்பாமல், சிறிய வரிகளில், சாதாரண வார்த்தைகளில் சொல்லப்பட்டுள்ளது. ஜெயமோகன் அவரின் குழந்தைக்களுக்காக சொல்லப்பட்ட கதை, பின் மற்ற குழந்தைகளுக்காகவும் புத்தகமாக வந்துள்ளது. பெரியவர்களும் படிக்கலாம், தப்பில்லை. கொஞ்ச நேரம் குழந்தைகளானால் என்ன குறைந்து போகப் போகின்றது. எப்பொழுதும் சீரியசாக ஏதாவது படித்துக் கொண்டிருந்தால் கஷ்டம்தான்.

இதே பனிமனிதனை மையமாக கொண்டு ஒரு கதை படித்துள்ளேன், முழுக்கதை நினைவில்லை, இமயமலை, அங்குள்ள குகைகள், குகைக்குள்ளான நீர் வீழ்ச்சிகள், பனிமனிதன், வெந்நீர் ஊற்றுகள் எல்லாம் வரும். யார் எழுதியது, என்ன கதை என்று மறந்துவிட்டது. பல வருடங்களுக்கு முந்தையது.

இமயமலையில் இருக்கும் ராணுவ அதிகாரி பாண்டியனுக்கு ஒரு பொறுப்பு தரப்படுகின்றது. பனி மனிதனை கண்டு பிடிக்க வேண்டும். பாண்டியன் துணைக்கு ஒரு ஆராய்ச்சியாளரை கூட்டிக் கொண்டு  செல்கின்றான். வழியில்  மற்றுமொரு லடாக்கிய சிறுவனும் சேர்ந்து கொள்ள, கடைசியில் பனிமனிதனை காண்கின்றார்கள். பனிமனிதன் அவர்கள் வாழும் பகுதிக்கு அழைத்துச் செல்கின்றான், அங்கு பனிமனிதர்கள் ஒரு கூட்டமாக வாழ்கின்றார்கள். பாண்டியனும், டாக்டரும் அங்கு பல விநோதங்களைப் பார்க்கின்றனர். ஒரு கற்பனை உலகம். பிரிய மனமின்றி பிரிந்து வருகின்றனர்.

கதை முழுவது ஏகப்பட்ட தகவல்கள் சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் எழுதியுள்ளார். அறிவியல் தகவல்கள், பனிமலையில் வாழ்பவர்களின் வாழ்க்கை முறை, புத்த மத தகவல்கள் என ஏராளம். அதற்காக கதை முழுவதும் அட்வைஸ் மழையுமல்ல, விறுவிறுப்பாகவும் உள்ளது. குழந்தைகளின் கற்பனைக்கேற்ப, வைரப்பாறை, வைர நதி, மரத்தில் மேயும் குதிரை,  பன்றி சைஸ் யானை (அவதார் வருவதற்கு முன்பே எழுதப்பட்டது), பறக்கும் மீன், நீந்தும் சிங்கம்.

படிக்க படிக்க அவ்வுலகத்தில் நுழைந்துவிட்டது போன்ற ஒரு பிரமை. மனதளவில் நானும் அவ்வுலகை சுற்றிப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அவதாரை 3டியில் பார்த்த போது ஏற்பட்ட ஒரு பிரமிப்பு மீண்டும். அவதாரை விட வலுவாக, அப்படம் காட்டுவதைத்தான் நான் பார்க்க முடியும், ஆனால இது என் சொந்த கற்பனை. குழந்தைகள் படிக்கும் போது அவர்களின் உலகில் இவ்வுலகம் மேலும் அவர்களின் கற்பனையால் வலுப்படுத்தப்படும்.

பனிமனிதர்கள் உலகத்தில் தீமையில்லை, பகையில்லை, ஆசையில்லை, அவர்களுக்கு என்று ஏதுமில்லை, மொழி இல்லை. அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்கின்றார்கள், பூச்சிகள் அனைத்தும் ஒரு தனி அலைவரிசையில் பேசிக்கொள்வதைப் போல, அவர்களின் தொடர்பு இருக்கின்றது.

கதையின் நடுவே பல ஆழமான உரையாடல்கள், புத்தமத தத்துவங்கள். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதன் விளக்கங்கள்.

யதிகள் என்பவர்கள் யார்?


//ஒரு பாத்திரத்தில் விதை தானியங்களை சேகரித்து வைத்து, அதை நன்றாக மூடி மலை மேல் வைத்து விடுவோம், ஏதாவது ஏற்பட்டு அனைத்தும் அழிந்தாலும், மீண்டும் அதை எடுத்து முதலில் இருந்து ஆரம்பிப்போம்//


அந்த விதை தானியங்களை போன்றவர்கள் யதிகள். உலகத்தின் தீமை அதிகமாகி போகும் போது, மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க உதவப் போகின்றவர்கள் அவர்கள். எப்படியும் மனிதன் பூமியை நாசமாகத்தான் போகின்றான், யதிகள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். யதிகள் என்பது புத்த மதத்தின் ஒரு நம்பிகை என்று நினைக்கின்றேன்.

குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அன்பை போதிக்கும் அருமையான கதை          http://rengasubramani.blogspot.in/2013/02/blog-post_4.html   .  

பனிமனிதனும் அவதாரும்


சிலமாதங்களுக்கு முன்பு வாங்கிய ஜெயமோகனின் பனிமனிதன் குழந்தைகளுக்கான நெடுங்கதை படித்தேன். முன்னுரையிலேயே குறிப்பிட்டு விடுகிறார், இது குழந்தைகளுக்கானது மட்டுமல்ல பெரியவர்களுக்கானதும்தான் என்று.சின்னச் சின்ன வாக்கியங்களில் முழு நாவலும் கூடவே பற்பல அறிவியல் தகவல்களும்

நாவல் இமயமலை லடாக் பகுதிகளில் காணப்படும் மிகப்பெரிய காலடித்தடங்கள் குறித்த இராணுவத்தினரின் ஆய்வு பற்றியது.மேஜர் பாண்டியன் என்பவன் அக்காலடித்தடங்கள் குறித்து ஆராயப் போகிறான்.கூடவே பௌத்த மதம் குறித்த விஷயங்களும் வருகின்றன. வாழும் புத்தரைத்தேர்வு செய்வதற்காகன தேடலும் இடம்பெறுகிறது.யதி என்னும் பனி மனிதனைத் தேடும் ஒரு சாகசப் பயணம் தான் நாவல். மேலும் படிக்க ஆசையாக இருந்தால் udumalai.com இல் வாங்கிப் படிக்கவும்.
அதுவரை சாதாரணமாகப் படித்துக் கொண்டிருந்த நான் பனிமனிதனை அவர்கள் சந்திக்க ஆரம்பித்த இடத்தில் பனிமனிதர்கள் வாழும் இடம் பற்றிய வர்ணனைகளில் மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளானேன். பல இடங்கள் எனக்கு அவதார் திரைப் படத்தை நினைவுபடுத்தின.நாவல் எழுதப் பட்டது 1999 ஆம் ஆண்டு.அவதார் ஜேம்ஸ் கேமரூனால்  14 ஆண்டுகளாக மெருகேற்றப் பட்டது என படித்துள்ளேன். கண்டிப்பாக ஜெயமோகனும் ஜேம்ஸ் கேமரூனும்   சந்தித்திருக்கும் வாய்ப்பில்லை எனும் பட்சத்தில் இது மிகுந்த வியப்புக்குரிய ஒன்றுதான்.
சில உதாரணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் படித்துவிட்டு நீங்களே கூறுங்கள்.
31 ஆம் அத்தியாயத்தில் வரும் வரிகள்

// அங்கு நின்ற ஒவ்வொரு மரமும் மிகப் பெரியவையாக இருந்தன.நமது ஊரில் உள்ள ஒரு மிகப் பெரிய மரத்தின் அடிமரம் அளவுக்கு அந்த மரங்களின் கிளைகள் காணப்பட்டன.//

bigtree

 // ஒரு இடத்தில் ஏராளமான நாய்கள் மரங்கள் மீது துள்ளித்துள்ளி விளையாடின.அவற்றுக்கு ஆடுகள் போல கொம்புகள் இருந்தன.அவற்றின் கால்களும் குரங்குக் கால்கள் மாதிரி இருந்தன // 

 dog
 எவ்வளவு கூர்மையான விவரிப்பு. கூடவே படத்தில் நாய்களின் கால்களைப் பாருங்கள்.எப்படி இருவரும் இது பற்றி யோசித்தனர் என்று வியப்பு மேலோங்குகிறது.

அத்தியாயம் 35 // மிகப்பெரிய நீல நிற மின்மினிகள் கூட்டம் கூட்டமாக எழுந்து பறந்தன.ஒவ்வொரு மின்மினியும் ஒரு ஜீரோ வாட் பல்ப் அளவுக்கு இருந்தது.//

1355207455_A-scene-from-James-Camerons-Avatar
 இவற்றிலும் பெரிய ஆச்சரியத்தைப் பாருங்கள்
அத்தியாயம் 34
//ஒவ்வொரு பனி மனிதனாக வந்து மேற்குத்திசை நோக்கி அமரத் தொடங்கினார்கள்.சற்று நேரத்தில் அங்கு ஏராளமான பனி மனிதர்கள் கூடி விட்டார்கள்.“எப்படியும் இவை மூவாயிரத்துக்கு குறையாது” என்றார் டாக்டர்.பனிமனிதர்கள் மறையும் சூரியனைப் பார்த்தபடி அமர்ந்தார்கள்.அவர்களுடைய முகமெல்லாம் சிவப்பாக அந்தியின் ஒளி பரவியது .மிக மெதுவாக அவர்கள் பாட ஆரம்பித்தார்கள்.அது பாட்டு இல்லை வெறும் ரீங்காரம் மட்டும் தான்.ஆனால் அத்தனை பேரும்சேர்ந்து ஒரே குரலாக அதை எழுப்பினார்கள்.ஒரு குரல் கூட விலகவே இல்லை.//
avatar_ritual1
 அவதாரில் நாவிகளின் வாழ்க்கைக்கும் இயற்கைக்குமான நுண்ணிய பிணைப்பு, தங்கள் தெய்வம் ஏவாவிடம் வேண்டும்போது உட்கார்ந்து ஒத்த மனதுடன் வேண்டுதல் என பல நிகழ்வுகள் பனிமனிதன் கதையிலும் வந்துள்ளது.
என்னுள் எழுந்த வியப்பு இன்னும் அடங்கவே இல்லை. கிட்டத்தட்ட மனிதனால் எடுக்கப்படக்கூடிய சினிமாவின் எண்ணமுடியாத சாத்தியங்களைக் கடந்த படைப்பு அவதார் என்று சிலாகிக்கப்படுகிறது. 10 வருடங்களுக்கு முன்னரே படைக்கப்பட்ட படைப்பான பனிமனிதனில் இடம்பெற்ற வர்ணனைகள்  2009 இல் வந்த அவதாரில் காணப்பட்டது  தற்செயல் நிகழ்வுதான் என்று நினைக்கிறேன் .
http://kumarkr.com/2014/07/17/jeyamohan-james-cameron/

தமிழில் சிறுவர் இலக்கியம் -ஹரன் பிரசன்னா

தமிழில் சிறுவர் இலக்கியம் திருப்திபடக்கூடிய அளவிற்கு உள்ளதா?– ஹரன்பிரசன்னா.
பொதுவாக இம்மாதிரிக் கேள்விகள் கேட்கப்படுகையில் அறிவுஜீவிகள், இல்லை என்ற பதிலை சோகமாகவோ வேகமாகவோ சொல்வதுதான் வழக்கம். அவர்களுக்கு உயர்ந்த மதிப்பீடுகளைக் கொண்ட நுட்பமான ஆள் என்ற படிமம் கிடைக்கிறதே. ஆனால், “சரி, இதுவரை வெளிவந்தவற்றைப்பற்றிய ஒரு முழு மதிப்பீட்டை சரியான தகவல்களுடன் கொடு பார்ப்போம்” என்றுகேட்டால் பதில் இருக்காது. நாடகம், திறனாய்வு, கல்வித்துறைஆய்வு எதைப்பற்றியானாலும் இதுதான் நிலை. இங்கே எதையும் கூர்ந்து படிக்க, குறைந்தபட்சம் கவனிக்க ஆளில்லை. ஆனால் மட்டம்தட்ட ஒவ்வொரு ஊரிலும் மேதைகள் உலவுகிறார்கள். ‘இலக்கியவாசகமேதை’ களைக் கொஞ்சம் கட்டுக்குள் கொணர வேண்டிய காலம் வந்துவிட்டது.


தமிழில் சிறுவர் நூல்கள் ஏராளமாக வருகின்றன. அவற்றின் தரம் மற்ற நூல்களைப் போலவே பலவகையானது. சோவியத் பதிப்பகங்கள் போட்ட சிறுவர் நூல்கள் அற்புதமானவை. நான் நிறையச் சேர்த்து என் பிள்ளைகளுக்குக் கொடுத்தேன். பேரழகி வசீலிசா, சோவியத் நாட்டுப்புறக்கதைகள், ஓவியனின் கதை போன்ற நூல்களின் அச்சும் ஓவியங்களும் மகத்தானவை. அவை இங்கே தேங்கிக்கிடந்து பாதிவிலை கால்விலைக்கு விற்றன.


தேசியக் குழந்தைகள் புத்தக நிறுவனம், தேசிய பிரசுரப் பிரிவு மற்றும் சாகித்ய அகாதமி வெளியீடுகளாக 15 முதல் 30 ரூபாய் விலைகளில் ஏராளமான குழந்தை நூல்கள் மிக அழகிய கட்டமைப்புடன் வந்துள்ளன. பெரும்பாலான என்.சி.பி.எச் கடைகளில் கிடைக்கின்றன. இவ்வாரம் நாகர்கோவில் என்.சி.பி.எச் புத்தகக் கண்காட்சியில் சைதன்யாவுக்கும் அஜிதனுக்கும் 20 நூல்கள் வாங்கினேன்.


என் நண்பர் எம்.கெ.சந்தானம் தேசிய பிரசுரப் பிரிவில் ஆசிரியர். அவர்கள் வெளியிடும் குழந்தை நூல்கள் எல்லா மொழிகளிலும் வருகின்றன. தமிழில் வெளிவருவதைவிட முப்பது மடங்கு அதிகம் பிரதிகள் ஆங்கிலத்தில் வெளிவருகின்றன. அவை வருடம் இருபதிப்புகள் வரை வரும்போது தமிழில் ஒருபதிப்பு விற்றுப்போக நான்கு வருடங்கள் வரை ஆகின்றன. இம்முறை சைதன்யாவுக்கு வாங்கிய பல நூல்கள் 6 ரூபாய் விலைகொண்ட 1995ம் வருடப் பதிப்புகள்!


தமிழ்நாட்டில் பெற்றோர் குழந்தைகளுக்குத் தமிழ்நூல்கள் வாங்கி அளிப்பதேயில்லை. நூல்கள் வாங்கப் பணம் செலவுசெய்யும் நிலையிலுள்ள பெற்றோரின் குழந்தைகள் ஆங்கிலவழிக் கல்வியிலேயே படிக்கும். பெற்றோரும் பள்ளியும் ஆங்கில வாசிப்பையே ஊக்கமூட்டுகின்றனர். வாசிப்பு ஆங்கில மொழியறிவை வளர்க்கும் என்பது பொதுவாகச் சொல்லப்படும் காரணம்.


என் நண்பர் ஜீவா சொன்ன நிகழ்ச்சி. ரயிலில் போகும்போது அவரது பெண் என் ‘பனிமனிதன்’ நாவலைப் படித்துக் கொண்டிருந்தாள். எதிரே உட்கார்ந்திருந்த ஒரு மருத்துவர் அதை ஜன்னல் வழியாக வெளியே போடு, உனக்குப் பரிசு தருகிறேன் என்றாராம். அவர், ‘பாடநூல் தவிர எதையுமே படித்தது இல்லை. ஆகவேதான் டாக்டர் ஆகமுடிந்தது. புத்தகம் படிப்பது கெட்டபழக்கம்’ என்றாராம். ஜீவா அதைச் சாம்பல் இதழில் ஒரு படக்கதையாக எழுதினார். அக்குழந்தை ஆங்கில நாவல்- எனிட் ப்ளைட்டன்- படித்திருந்தால் அம்மனிதர் அப்படிச் சொல்லியிருக்கமாட்டார்.

ஆனால் பிள்ளைகளுக்குத் தமிழ் படிக்க ஆர்வம் இருக்கிறது, காரணம் அது அவர்கள் பேசிப்புழங்கும் மொழி. அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் ஒளித்துப் படிப்பார்கள். தமிழில் இன்று ஆறு நாளிதழ்கள் இலவச இணைப்பாகக் குழந்தைகள் இதழை அளிக்கின்றன. மொத்தப் பிரதி 20 லட்சம். இது சாதாரண விஷயமல்ல. ஆம், குழந்தைகள் படிக்கின்றன. இலவசமாக வெளியிடப்படுவதனால் அவற்றுக்கு நூல்கள் கிடைக்கின்றன. பணம் தந்து எவரும் வாங்கி அளிப்பது இல்லை. மேலும் இன்றைய கல்வியின் பயங்கரமான போட்டியும் கெடுபிடியும் படிக்கக் கூடிய நேரத்தையும் மனநிலையையும் குழந்தைகளுக்கு அளிப்பது இல்லை. அதையும் மீறி அவை படிப்பது ஆச்சரியம்தான். ஆனால் அவ்வெழுத்தின் தரத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதற்குத் தடையாக இருப்பது இதழ்களை நடத்துபவர்களின் மனநிலையே. குழந்தை இதழ்கள் இன்னும் மாயஜாலம், சில்லறை நகைச்சுவை ஆகியவற்றாலேயே நிரப்பப்படுகின்றன.


ஆகவேதான் நான் தினமணி சிறுவர் மணி இணைப்பில் பனிமனிதன் நாவலை எழுதினேன். அறிவியல்பூர்வமாக திட்டமிடப்பட்ட குழந்தைகள் நாவல் அது. 8 வார்த்தைகளுக்கு மிகாத சொற்றொடர். மொத்தம் 100 சொற்களுக்கு மிகாத மொழி. கண்டிப்பாக அது எளிய நாவல் அல்ல. அறிவியலும் தத்துவமும் அதில் உண்டு. என் கனவும் என் அழகுணர்வும் அதில் உள்ளது. மிகப்பரவலான வாசிப்பு அதற்குக் கிடைத்தது. சிறுவர்மணி ஆசிரியராக இருந்த மனோஜ்குமாரின் ஆர்வத்தாலேயே அதை எழுத முடிந்தது. அப்படி ஆர்வத்துடன் பிறர் எழுத வைப்பது இல்லை. மேலும் எழுத நினைத்திருக்கிறேன். சா.தேவதாஸ், ராஜம் கிருஷ்ணன் போலப் பலர் குழந்தை இலக்கியங்களை எழுதியிருக்கிறார்கள்.


ஆனால் பனிமனிதன் நூலாக வந்தபோது பரவலாக வாங்கப்படவில்லை. பள்ளி நூலகங்களில் சென்று முடங்கிவிட்டது. ஆகவே நூல்களாக தமிழில் சிறுவர் இலக்கியம் எழுதுவது வீண். இதழ்களிலேயே எழுதவேண்டும்.


ஒட்டுமொத்தமாக இப்படிச் சொல்லலாம். நல்ல நூல்கள் உள்ளன. குழந்தைகளுக்கு ஆர்வமும் உள்ளது. ஆனால் நாம் குழந்தைகளைக் கணிப்பொறியுலகுக்கு மனிதமென்பொருட்களாக மாற்றும் தீவிரத்தில் இருக்கிறோம். ஆகவே சிறுவர் இலக்கியத்துக்கு நம் சமூகத்தில் இப்போது இடமில்லை.

தினேஷ் நல்லசிவம் கடிதம்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு ..,
                                                                              நலம் அறிய விருப்பம் சார் .. தங்களின் “பனி மனிதன் ” நூலை இன்று வாசித்து முடித்தேன் ஒரே வீச்சாக  யாராக இருந்தாலும் அப்படிதான்  வாசிக்க முடியும் போல  அவ்வளவு ஒரு  சுவாரசியமான நடை .எளிய கற்பனைகளின் மூலம் நிகழ்வுகளை கோர்த்து கோர்த்து அவ்வளவு கனிவான கதை ஓட்டம்.


கதையின் கரு இதுதான்  ஒரு மூணு பேரு அந்த பனிமனிதன  அப்படி ஒரு மனிதன் இருப்பதை நம்ப முடியாமல் தேடி போகிறார்கள் ஆனால் உங்கள் அந்த   அசத்தலான எளிமையான  நடை  நான்காவதாக என்னையும் கூட்டி கொண்டு போய் விடுகிறது. ஓவொரு அத்தியாயத்திலும் ஏதாவது ஒரு வேகத்தை அதிகபடுதுவது மாதிரி ஒரு அசாதாரண திருப்பம் மேலும் ஒவ்வொரு பக்கத்திலும்  ஒரு முக்கியமான தகவலாவது வந்து கொண்டே இருக்கிறது அதையும் டாக்டர் திவாகர் சொல்றவிதம் , ஒவ்வொன்றுக்கும் கேள்விகளை பாண்டியன் மூலமாக  அதை அவரிடம் தெளிவாக கேட்டு விடுவது.அதிகம் எதுவுமே பேசாமல் வருகின்ற கிம் sungh சில இடங்களும்   வெள்ளந்தியாக அனைத்து நிகழ்வுகளின் மேலும் அவன் கொள்ளும் நம்பிக்கை , அவன் மூலியமாக மட்டுமே பனிமனிதன் அவர்களை பார்க்க அவர்கள் இடத்திற்கு அனுமதிப்பது பின்னால் அனுபவங்களின் மூலம் அவன் மகா லாமாவாக நிலையை அடைவது ஒரு அர்த்தமான பயணம் போல கொண்டு சென்றிருப்பது

,பனி சூழ்ந்த இடத்தின் காட்டை காண்பித்திருப்பது அதற்கு சூழியல் ரீதியான விளக்கம், பனிமனிதன் வாழும் இடத்தின் விந்தையான பிராணிகள் , அதை விவரிக்கும் விதம் ,அவர்களின் தியான முறை ,  ஆழ்மன ரீதியாக செயல்படும் அவர்களின் மனம் ,பாண்டியனின்   வவ்வால் பயணத்தை தற்போது வந்த அவதார் படத்துடன்  கற்பனையாக இணைக்க   அந்த உலகத்தில் அவர்களோடு என்னாலும் ஓரளவு உணர   முடிந்தது.


எவ்வளவோ வரிகள் படிக்கும் போது ரீபிட் ஆகி விடுகிறது.பனி மனிதன் மற்றும் அவர்கள் சார்ந்த உலகத்தை பார்த்து விட்டு வந்தவுடன் திரும்பி செல்லும் போது லாமாவுடன் வரும் இடங்கள் பாண்டியனும் திவாகரும் இறுதி அத்தியாங்கள் “மனிதன் கருணையானவன் அனால் மனித இனத்திற்கு கருணை கிடையாது “,”இந்த பூமியின் எதிர்காலத்தை விட கடமை பெரிதா ” என திவாகர் பாண்டியனிடம் கோபப்படும் இடங்கள் , நாவலினின் இறுதியில்  திரும்பி செல்ல அவர்களுக்கு  வழிகாட்டியாக பனிமனிதன் விட்டு செல்லும் காலடி தடம் ஆஹாஅந்த கணத்தில் நான் ரொம்ப நெகிழ்ந்து விட்டேன்  இதுதான்யா நம்ம ஜெயமோகன் என்று சொல்லி கொண்ட ஈரமாக முடித்தேன்.எத்தனை தடவை மறு வாசிப்பு செய்வேன் என்று தெரியவில்லை .   ரொம்ப உள்ள இறங்கி வாசிக்க வைத்து விட்டீர்கள் ரொம்ப  நன்றி சார்

.  படிக்கும் பழக்கம் இல்லாத நண்பர்களுக்கும் கூட   ப்ரெசென்ட் செய்ய ஒரு அருமையான கிப்ட் இந்த புத்தகம்.

திரு ஜெயமோகன் அவர்களுக்கு என்னுடைய எதிர்வினையாக நீங்கள் recommand செய்த தேவதேவன் இன்  மார்கழி தொகுப்பில்  எழுதிய ஒரு கவிதை யை சொல்ல தோன்றுகிறது
எந்த வைரத்திற்கு
குறைந்தது, என் அன்பே
இதோ
நம் இல்லத்தின்
இந்த ஜன்னல் கண்ணாடியில்
ஒளிரும் சூர்ய ஒளி
அது போல  எளிமையான நெகிழ்வான இந்த படைப்பு உங்களின் எந்த படைப்பு குறைந்து சார் ..?.சிறுவர்கள்  மட்டும்  படிக்கும் நாவல் என்று ஒதுக்கி வைத்தால் இழப்பு எனக்கு தான் .
—-
Regards
dineshnallasivam

அன்புள்ள தினேஷ்

பனிமனிதன் சிறுவர்களுக்கான மொழிநடையில் எழுதப்பட்டது. ஒருதளம் சிறுவர்களுக்கும் புரியக்கூடியது.  ஆனால் எந்த எழுத்தாளனும் கதையை முதலில் தனக்காகவே எழுதிக்கொள்கிறான். அவனுடைய மனம் அதில் ஈடுபடாவிட்டால் அவனால் எழுதமுடியாது. என்னுடைய அகம் எந்த சிக்கல்களில் புழங்குகிறதோ அதைத்தான் நான் எதிலும் எழுத முடியும். அதுவேதான் பனிமனிதனிலும் உள்ளது. பனிமனிதன் சிறுவர்களுக்கான ஓர்  சாகச-ஆன்மீக நாவல் என்று சொல்வேன்
ஜெ


பனிமனிதனும் ஹாரிபோட்டரும் -ஜீவா

ஒரு மொழியின் மிகச்சிறந்த எழுத்தாளன்தான் அங்குள்ள குழந்தைகளுக்காக எழுதவேண்டும் என்று கூறப்படுவதுண்டு . தமிழில் முக்கியமான எழுத்தாளர்கள் அனேகமாக எவருமே குழந்தைகளுக்காக எழுதியதில்லை . அதற்கு அவர்களுடைய எழுத்து முறை ஒத்துவந்ததில்லை . இங்கு பெரியவர்களுக்காக எழுதி தோற்றுப்போன எழுத்தாளர்களும் துணுக்கெழுத்தாளர்களும்தான் குழந்தைகளுக்காக எழுதியுள்ளார்கள் .


இத்தகைய எழுத்தில் ஏற்கனவே குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட கதைகளே மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருப்பதை காணலாம் .ராஜாராணி கதைகள் , மந்திரஜாலக் கதைகள் , சாகசக்கதைகள் போன்றவை . குழந்தைகளுக்காக எழுதும்போது அவர்களுக்கு நற்செய்திகள் ,நீதிகள் சொல்லவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இக்கதைகளில் உள்ளது .


கண்டிப்பாக குழந்தைகளுக்கான கதைகளில் நற்செய்திகள் தேவைதான் . நம் சமூகத்தின் அறங்களைத்தான் அவர்களுக்கு நாம் அளிக்கவேண்டும் . ஆனால் குழ்ந்தைகள் புதிய தகவல்களுக்காக ஏங்குகிறார்கள் . தாங்கள் வாழும் சூழலை தாண்டி செல்ல அவர்கள் மனம் துடிக்கிறது . ஆகவே புதிய நிலப்பரப்புகளைபற்றிய விவரணைகள் அவர்களுக்கு தொடர்ந்து தேவையாகின்றன.


இதையெல்லாம் நமது குழந்தை நூல்கள் சற்றும் பொருட்படுத்துவதேயில்லை . குழந்தைகளுக்காக எழுதுபவன் ஆராய்ச்சிகள் செய்து எழுதவேண்டும் என்று நம்முடைய குழந்தைஎழுத்தாளர்களிடம் சொன்னால் சிரிப்பார்கள். அத்துடன் நடை என்பது ஒரு கைபழக்கம் அல்ல , அதை நல்ல எழுத்தாளன் எப்படியும் கட்டுப்படுத்தலாம் என்று சொன்னாலும் அவர்களுக்கு புரியாது .இதனால்தான் நமது குழந்தைகள் இளமைப்பருவத்தில் காமிக்ஸ்கள் படிக்க ஆரம்பிக்கின்றன.நமது இளமை நினைவுகளில் முத்து காமிக்ஸும் , இரும்புக்கை மாயாவியும்தான் நினைவாக நிற்பார்களேயொழிய வாண்டுமாமாவோ .சின்னஞ்சிறு கோபுவோ , கல்வி கோபாலகிருஷ்ணனோ அல்ல .


நமது குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வம் ஏராளமாக உள்ளது .இப்போது தமிழின் ஆறு நாளிதழ்கள் குழந்தை இதழ்களை இணைப்பாக அளிக்கிறார்கள் . இவை மொத்தமாக 10 லட்சம் பிரதி வரும் .இது தமிழின் எந்த இலக்கியச் சூழலையும் விட பெரியது .ஆனால் இவ்விதழ்கள் தொடர்ந்து அந்நாளிதழ்களில் வேலைபார்க்கும் உதவி ஆசிரியர்களால் இஷ்டத்துக்கு எழுதி நிரப்பபடுகின்றன. ஒரு நல்ல எழுத்தளர்கூட இவற்றிலிருந்து உருவாகி வரவில்லை .இந்த தேவையை இங்கு எவருமே உணர்ந்ததாகவும் தெரியவில்லை .தினமணியின் சிறுவர் மணி சிறிதுகாலம் பொறுப்புணர்வுடன் வெளிவந்து இப்போது பழையபடி ஆகிவிட்டது .


கி ராஜநாராயணன் எழுதிய ‘பிஞ்சுகள் ‘ என்ற சிறு நாவல்தான் தமிழில் தீவிர இலக்கியவாதிகளால் எழுதப்பட்ட முதல் குழந்தை இலக்கியம் ஆகும் .அது ஒரு சிறந்த படைப்பும்கூட . அதன் பிறகு குறிப்பிடத்தக்க முக்கியமான நூல் ஜெயமோகன் எழுதிய ‘பனிமனிதன் ‘ . இது தினமணி தமிழ் மணி இதழில் 44 வாரங்கள் தொடராக வெளிவந்தது . இப்போது நூலாக வெளிவந்துள்ளது . இது தொடராக வெளிவந்தபோது வழக்கமான சிறுவர்கதைகளுக்கு பழகியவர்கள் இது சற்று சிரமம் தருவதாக இருப்பதாக சொன்னார்கள் . ஆனால் சில வாரங்களுக்குள்ளேயே மிகப்பரவலான வாசிப்பை பெற்று பிரபலமாகியது இது .
200 பக்கம் கொண்ட இந்த நாவல் குழந்தையிலக்கியம் என்று பார்க்கும்போது பெரியதுதான் . எந்த நல்ல குழந்தை இலக்கியத்தையும்போலவே இதுவும் பெரியவர்கள் , தேர்ந்த இலக்கியவாசகர்கள் , விரும்பி வாசிக்கக்கூடியதாக உள்ளது . குழந்தைகளுக்குரிய எளிமையான சாகச உலகத்துக்கு அடியிலே மிக முக்கியமான தத்துவார்த்தமான தேடலும் , குறியீடுகள் மூலம் உருவாகும் கவிதையும் கொண்டது இது .


முக்கியமாக நம்மை கவர்வது ஜெயமோகன் இதற்கென செய்துள்ள கடுமையான உழைப்பு . மலைவாழ்க்கை , பரிணாமக் கொள்கையின் புதிய வளர்ச்சி , மானுடவியல் கொள்கைகள் போன்ற பல துறைகளில் விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது . இதற்கென நிலவியல் /மானுடவியல் ஆய்வாளர் டாக்டர் . சு. கி. ஜெயகரன் [மூதாதையரைதேடி என்ற பிரபல நூலின் ஆசிரியர் . க்ரியா வெளியீடு ] அவர்களின் உதவியை ஆசிரியர் நாடியுளதாக குறிப்பிடப்படுகிறது .


அத்துடன் இந்தக் கனமான விஷயங்களை மிக எளிமையான மொழியில் தெள்ளத்தெளிவாக சொல்வதில் ஜெயமோகன் வெற்றியடைந்துள்ளார் .சொற்றொடர்கள் பெரும்பாலும் பத்து வார்த்தைகளுக்குள் தெளிவான எழுவாய் பயனிலை அமைப்புடன் உள்ளன. ஆயிரம் தமிழ் சொற்களை அறிந்த ஒரு குழந்தை இதை படித்துவிட முடியும் .


கதைப்போக்கில் இந்திய நிலப்பகுதியின் நிலவியல் வரலாறும் , மனிதனின் பரிணாமவரலாறும் விரிவாக சொல்லப்படுகின்றன.இதற்காகவே குழந்தைக் கதைகளில் காணப்படும் எல்லாம் தெரிந்த கதாபாத்திரமாக டாக்டர் திவாகர் என்ற கதாபாத்திரம் வருகிறது . கதைக்குள் வர முடியாத தொடர்புள்ள தகவல்கள் எளிய மொழியில் தனி கட்டத்துக்குள் தரப்பட்டுள்ளன .இந்த உத்தி மிகவும் வெற்றிபெற்ற ஒன்று . அதில் அரிஸ்டாடில் ,காளிதாசன் ,ஃப்ராய்ட் ,சி .ஜி .யுங் ,ழாக் லக்கான் என பல சிந்தனையாளர்களின் கருத்துக்கள் வருகின்றன. கட்டைவிரலுக்கு மனித வரலாற்றில் உள்ள இடம் முதல் மெக்ஸிகோவின் தங்கம் எப்படி உலகத்தை மாற்றியது , எப்படி சுற்றுச் சூழல் அழிவால் மெசபடோமியா அழிந்தது என்பது வரை எளிமையாக பேசப்படுகின்றன .


இமய மலைகளில் இருப்பதாக நம்பப்படும் ‘யதி ‘ என்ற பனிமனிதனைப் பற்றி ஏராளமான கதைகள் உள்ளன. ஜெயமோகன் அக்கதையை புதிய கோணத்தில் வளர்த்தெடுக்கிறார் . பனி மனிதனை தேடி இமயமலையின் மீது ஏறிப்போகும் சாகசக் கதையாக இது ஒரு கோணத்தில் உள்ளது . கதை முதிரும்போது பனிமனிதன் இந்திய மனித குலத்தின் குரங்கு மூதாதையான ராமபிதாக்கஸ் என்ற குரங்கு மனிதனில் இருந்து பிரிந்து முற்றிலும் வேறு வகையில் பரிணாமம் அடைந்த ஒரு இனம் என்று தெரிகிறது . மனிதனாக பரிணாமம் அடைந்த கிளை பேராசையும் , போர்வெறியும் கொண்டு உலகை சூறையாடும்போது வேறு ஒரு விதமான வளர்ச்சியை கொண்டவர்களாக பனிமனிதர்கள் இருக்கிறார்கள் . அவர்களுக்கு மனம் தனித்தனியாக இல்லை .எனவே மொழி இல்லை . அகங்காரம் இல்லை.ஆகவே ஆசையும் போராட்டமும் இல்லை.


பண்டைய கோயில் கோபுரங்களில் நவதானியங்கள் உலரவைக்கப்பட்டு கும்பங்களில் சேமிக்கப்படும். பிரளயம் ஏற்பட்டு எல்லாம் அழிந்தால் புதிய மண்ணில் விதைக்க விதை இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக . பேராசையால் போரிடும் மானுட இனம் அழிந்தால் புதிய மானுட இனம் உருவாவதற்காக சேமிக்கப்பட்ட விதை நெற்கள் பனிமனிதர்கள் எந்று சொல்லி நாவல் முடிகிறது .


இதன் கதைப்போக்கிலே மிக எளிமையாகச் சொல்லப்படும் மலைக்காட்சி வர்ணனைகள் அற்புதமானவை! ‘ மேகங்கள் இடைவெளி விட்டு சூரியனின் ஒளிக்கதிர்கள் வந்தன.அவை பனிப்பாளம் மீது விழுந்தன.கண்ணாடி அறைக்குள் விளக்கை வைத்தால் எப்படி இருக்கும் ? அதுபோல இருந்தது அக்காட்சி .நான்கு திசைகளிலும் பனிப்பாறைகள் ஒளி பெற்றன. ‘ஓர் இலக்கிய வாசகனுக்கு ஆழமான தத்துவ உருவகங்களாக ஆகும் நிகழ்ச்சிகளை ஏராளமாக இந்நாவலில் காணலாம்


எனிட் பிளைட்டன் நாவல்கள் , ஹாரி போட்டர் வரிசை போன்ற புகழ் பெற்ற குழந்தை எழுத்துக்கள் குழந்தைகளுக்குள் உள்ள கற்பனைத்திறனையும் சாகச உணர்வையும் மட்டுமே தூண்டிவிடுகின்றன . மேலும் இந்நாவல்களில் மிக முக்கியமான ஒரு அம்சமாக உள்ளது மேற்கத்திய வாழ்க்கைப்பார்வை . ட் ரஷர் ஐலண்ட் இதற்கு முக்கியமான உதாரணம் . புதிய உலகங்களுக்குச் சென்று , அவற்றை வென்று கைப்பற்றி , ஆள்வதும் பயன்படுத்துவதும் இக்கதைகளின் முக்கியமான கதைக்கருவாகும்.இது ஒரு புரதனமான ஐரோப்பிய மனநிலை ஆகும் . அத்துடன் கரியவர்களோ , குள்ளமானவர்களோ ஆன வேறு நிலப்பகுதி மக்களுக்கு தலைவர்களாகவும் ரட்சகர்களாகவும் ஆகும் ஃபாண்டம் , டார்ஜான் போன்ற கதாபாத்திரங்களுக்குள் வெள்ளைய இனமேன்மைவாதம் உள்ளே ஒளிந்துள்ளது .


நம்முடைய குழந்தை நாவல்களுக்குள் நம்முடைய மரபின் சாரமான விஷயங்கள் அடங்கியிருக்க வேண்டும் . நம்முடைய மரபு பல்வேறுபட்டது என்றாலும் அதன் மைய ஓட்டமாக சில விஷயங்கள் இருக்கின்றன. உதாரணமாக மேற்கத்திய மரபு மனிதனை மையமாக கொண்டு இயற்கையையும் பிரபஞ்சத்தையும் அவனை சுற்றியுள்ளவையாக காட்டுகிறது . மனிதனால் அறியப்படும் பொருட்டும் , வென்று பயன்படுத்தும் பொருட்டும் தான் அவை உள்ளன. மனிதனே பிரபஞ்சத்தின் அரசன் . மனித அறிவேரெளலகின் முக்கியமான அம்சம் . மேற்கே அதை மேம்மன் வழிபாடு என்றும் சோபியாவழிபாடு என்றும் சொல்கிறார்கள். அதைத்தான் அங்குள்ள காமிக்ஸ் களும் வெளிப்படுத்துகின்றன. நேர்மாறாக நம்முடைய புராண மரபிலும் சரி , நாட்டுப்புற மரபிலும் சரி மனிதன் இயற்கையின் ஒரு பகுதி மட்டுமேயாகும் . கருணை வடிவமாக தியானத்திலிருக்கும் புத்தரே நம்முடைய மனதிலாழமாக பதிந்துள்ள சிலை .


அதைப்போல நம்முடைய குழந்தை கதைகளுக்குள் நமது தேசிய /கலாச்சாரப் பெருமிதங்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் . அவை நமக்கு தன்னம்பிக்கை அளிப்பவை . பெரியவர்களுக்கான இலக்கியங்களில் அது எப்படியிருக்கவேண்டுமென்பது வேறு விஷயம் . இன ,நிற மேலாதிக்கத்தை நம் குழந்தைகள் மனதில் மேலைநாட்டு காமிக்ஸ் கள் ஊட்ட நாம் அனுமதிக்ககூடாது . அத்துடன் நம்முடைய குழந்தையிலக்கியங்களில் கண்டிப்பாக ஒரு இலட்சியவாத அம்சமும் இருந்தாக வேண்டும் . பெரிய கனவுகளையும் கருணையையும் அவை உருவாக்க வேண்டும் .வெறும் வீர சாகசங்களாக மட்டும் அவை இருக்கக் கூடாது .


இந்தக் கோணத்தில் பார்த்தால் பனிமனிதன் மிக முக்கியமான ஒரு முன்னோடி ஆக்கம் என்றே சொல்வேன் . நவீன அறிவியல் பற்றி பேசுகையில்கூட அது இந்தியாவின் பெருமைமிக்க மரபுகளைப் பற்றியும் பேசுகிறது . நாவல் சொல்லும் சாரமான உண்மை நம் மரபிலிருந்து வந்ததாகும் . பெரும் செல்வக் குவியல்களை கண்டபிறகு அவற்றை நிராகரித்து இயற்கையைப்பற்றிய ஆழமான ரகசியத்தை மட்டுமே உள்வாங்கிக் கொண்டு அதன் கதாபாத்திரங்கள் திரும்பி விடுகின்றன. இயற்கையுடன் இசைவுள்ள ஒரு வாழ்க்கையை அது பேசுகிறது .மனிதகுலத்தையே தழுவியதாக ஒரு கருணைமிகுந்த பெரும் கனவை முன்வைக்கிறது . கண்டிப்பாக நம் குழந்தைகள் படிக்கவேண்டியது ஹாரிபோட்டர் அல்ல , பனிமனிதன்தான் . ஹாரிபோட்டரை விட எல்லா வகையிலும் சுவாரஸியமூட்டும் ஆக்கம்தான் பனிமனிதன்.


ஆனால் சென்னையில் ஒரு கடையிலேயே 1500 பிரதிகள் ஹாரிபோட்டர் விற்றது . பனிமனிதனுக்கு இதுவரை இங்குள்ள எந்த இதழிலும் ஒரு மதிப்புரை கூட வரவில்லை . இது நம் கலாச்சரம் போகும் திசையை காட்டுகிறது . இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் மேலைநாட்டுக் குழந்தைகள் மிக விரும்பி படிக்குமோ என்னவோ .
**
[பனி மனிதன் . பக்கம் 240 .விலை ரூ90 . கவிதா பப்ளிகேஷன்ஸ் .8, மாசிலாமணி சாலை ,தி. நகர் , சென்னை 600017 இந்தியா

அம்மாவின் கடிதம்

அன்புள்ள ஜெ,
என் அம்மா ஒருமாதம் முன்பு ‘பனிமனிதன்’ வாசித்தார். அதைப் பற்றி அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தோம். அவர் வயது 63. தன் 6 மாத பேரனை ‘கிம்சுங்’ என்று ஒருமுறை பெயர் போட்டுக் கொஞ்சினார். ‘நீ உன் வாசிப்பனுபவத்தை அவருக்கு எழுதலாம்’ என்று கூறினேன். இதற்கு முன்பு, நான் மூன்று மாதம் வெளிநாடு சென்றுவிட, எனக்கு Sweet surprise ஆக என் மனைவி ‘பனிமனிதன்’ புத்தகம் வரவழைத்து வாசித்துவிட்டு ‘ஏங்க! ஜெயமோகனுக்கு புத்தர் ரொம்ப புடிக்குமா? சொல்லுங்க சீக்கிரம்’ என்று என்னை பயங்கரமாகத் திகைக்க வைத்தாள். சட்டென்று ‘ஜெயமோகன்’ என் குடும்பத்தில் அனைவரும் உச்சரிக்கும் பெயர் ஆகிவிட்டது.
அம்மா தாளில் எழுதியதை டைப் செய்து கீழே தந்துள்ளேன்…..
அன்பார்ந்த ஜெயமோகனுக்கு,
ஜெயலட்சுமி எழுதுவது. நான் உங்கள் நாவலான ‘பனி மனிதன்’ கதை படித்தேன். எளிமையான நடையும் அதில் உள்ள கருத்துக்களும் மனதை கவர்ந்தன. அதில் வரும் ‘கிம்சுங்’ பாத்திரமாக மனிதர்கள் இருப்பது கோடியில் ஒருவர்தான் உள்ளனர். நீங்கள் எழுதிய ‘பனிமனிதன்’ கதையைப் படித்தபோது நானும் என் மகன் இளையராஜாவும், அக்கா மகன் சரவணனும் சேர்ந்து மணாலி சென்ற ஞாபகம்தான் வந்தது. பனியில் மனிதனின் வாழ்க்கை எவ்வளவு கொடூரமானது என்பதைத் தெரிந்து கொண்டேன். கடினமாக உழைப்பவர்களுக்குப் பனிமனிதன் வழிகாட்டுவது போல் என் வாழ்க்கையிலும் கடவுள் வழி காட்டினார். நல்லவர்களுக்கு எப்பொழுதும் கற்பனைப் பனிமனிதனின் அருள் உண்மையான வாழ்க்கையிலும் உண்டு.
பிரியமுடன்,
S Jayalakshmi.
இந்நிகழ்வுகள், அவற்றின் இடைவெளிகளில் உள்ள மெல்லிய கவித்துவம் மற்றும் இலக்கியம், அதன் மீட்சி பற்றிய யோசனையில்……..
நன்றியுடன்,
ராஜா.

சுனீல் கிருஷ்ணன் விமர்சனம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் ஆம்னிபஸ் தளம் குழந்தைகள் இலக்கியத்தைக் கொண்டாடுகிறது.  சிறார் இலக்கியத்தை பற்றிய எனது அடிப்படை புரிதல்களைப் பகிர்ந்துக்கொண்டு முன்செல்வதே சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.  ஓரளவு கோர்வையாக வாசிக்கத் தெரிந்த நாள் முதல் தினமலர் இதழின் சிறுவர் இணைப்பாக வெள்ளிதோறும் வரும் சிறுவர் மலரை வாசித்தது நினைவில் நிற்கிறது. இதழின் கடைசி பக்கத்தில் வரும் பலமுக மன்னன் ஜோ, பேய்ப் பள்ளி, சோனிப் பையன், எக்ஸ்- ரே கண், சிண்டன் போன்ற படக்கதை பாத்திரங்களின் உருவங்களைத் தெளிவாகவே நினைவுக்கூர முடிகிறது. பின்னர் கோகுலம், சந்தாமாமா, டின்கில் என்று சென்ற வாசிப்பு பதின்ம பருவத்தில் ஹாரி பாட்டருக்குத் தாவியது. ஏறத்தாழ அதே சமயத்தில் தமிழில் கல்கியும், தேவனும் எனக்கு அறிமுகமானார்கள்.

Image 1


நண்பர் ஒருவர் சொன்னார், "குழந்தைகளுக்கான திரைப்படம், புத்தகம் என்று முன்னிறுத்தப்படுபவை பெரும்பாலும் குழந்தைகளைக் காட்டிலும் பெரியவர்களையே கவருகின்றன. காரணம் மனித மனம் அந்த அனுபவத்தின் வாயிலாக தன்னுடைய பால்யகால நினைவுகளைத் திரட்டி தற்காலிகமாகவேணும் காலயந்திரத்தில் பின்னோக்கிப் பயணிக்கிறது. முற்றுபெறாத ஏக்கங்களின், கனவுகளின் கதவுகளை அவை தட்டித் திறக்க முயல்கின்றன. கொண்டாடப்படும் அனைத்து சிறுவர் இலக்கியங்களும், படைப்புகளும் பெரியவர்களுக்கானதே. வளர்ந்த பெரியவர்களின் வாழ்வியல் வேட்கைகளில் சிக்கி ஒளிந்து நின்று குறுகுறுப்புடன் காத்திருக்கும் நமக்குள்ளிருக்கும் அந்தக் குழந்தையின் ஏக்கத்தை தீர்ப்பதே தேர்ந்த சிறார் இலக்கியம்," என்றார் அவர். "பெரியவர்கள் மீண்டும் குழந்தை பருவத்து பொருந்தாத ஆடைக்குள் நுழைய முனைவது போல குழந்தைகள் ஒவ்வொரு நாளும் தங்களை பெரியவர்களாகவே பாவித்து, விரைவில் வளர்ந்து ‘பெரிய ஆளாக’ வேண்டும் என்றே முனைகிறார்கள்," என்றார். யோசித்துப் பார்த்தால் இதில் ஓரளவு உண்மை இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.

சிறுவர் இலக்கியத்திற்கான வரையறை என்ன என்பதே ஒரு முக்கியமான கேள்வி. தேர்ந்த சிறுவர் இலக்கியம் நமக்கு எவற்றை அளிக்கிறது?  எனது வாசிப்பின் எல்லையில் நின்றுகொண்டு சிறார் கதைகளில் தென்படும் சில வகைமாதிரிகளை சுட்டிக்காட்ட முனைகிறேன்.

பெரும்பாலும் கதையின் மைய பாத்திரம் ஒரு சிறுவன் அல்லது சிறுமி அல்லது ஒரு அதிநாயகன்

உடன்வரும் உற்ற தோழர் குழாமில் ஒரு வளர்ப்புப் பிராணி

கதை நாயகனுக்கு ஏதோ ஒரு அதீத திறன் வாய்த்திருக்கும்.

வீர வழிபாடு என்பதே பெரும்பாலான சிறார் கதைகளின் மைய இழை என சொல்லலாம்.

அபார கற்பனை வீச்சு கொண்ட தர்க்க அதீத நிகழ்வுகளால் நிறைந்த  ஃபேண்டஸி உலகம்.

கதை ஏதோ ஒருவகையில் அற மேன்மையை வலியுறுத்தும்.

இத்தனை வகைமாதிரிகளிலும் சிறுவர் இலக்கியத்தில் வீரவழிபாடு எனும் கதைக் களத்தை தாண்டி வேறோர் தளத்தைப் பேசும் கதைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். நீதிக்கதைகள், வீரவழிபாட்டுக் கதைகள் ஆகிய இவ்விரண்டின் பின்புலத்தில் நோக்கினால், தமிழின் மிக முக்கியமான சிறார் இலக்கிய ஆக்கமாக பனி மனிதனை குறிப்பிட முடியும்.

ஈசாப் நீதிக்கதைகள், விக்கிரமாதித்தியனும் வேதாளமும், பஞ்ச தந்திரகதைகள் - இவற்றில் சிறார்களுக்கான அற்புதமான கதைக் களன் உள்ளது என்றே குறிப்பிட வேண்டும். ஆனால் இவ்வகை நீதிக்கதைகளில் உள்ள சிக்கல், இவை பெரிய அளவிலான கற்பனைகளுக்கு இடம் கொடுப்பதில்லை. முல்லா நசுருதீன் கதைகளும், தெனாலி ராமன் கதைகளும், பீர்பால் கதைகளும் சாதுர்யமான நகைச்சுவையை களமாகக் கொண்ட கதைகள். அதிலுள்ள ஒருவித மிஸ்டிக் தன்மை காரணமாக முல்லா கதைகள் மீது எனக்கு சற்று கூடுதலான ஈர்ப்பு உண்டு. 

குழந்தைகளின் வாழ்வில் கதை எப்போது உள்நுழைகிறது? தாத்தாக்களும் பாட்டிகளும் வாய்மொழியாக சில கதைகளை உருவாக்கி நமக்களிக்கின்றனர். முடிவற்ற சாத்தியக்கூறுகள் உள்ளடங்கிய கதைகள். நேரத்திற்கு ஏற்ப, கதை கேட்பவருக்கு ஏற்ப உருமாறும் கதைகள். அதன்பின்னர் படக்கதைகள் காமிக்சுகள். பெரும்பாலான காமிக்ஸ் கதைகள் மேற்குலக தாக்கத்தில் உருவாகி இங்கு சந்தைப்படுத்தப்படுகிறது என்றே தோன்றுகிறது. இதற்கு ஒரு விதிவிலக்கு அமர் சித்திர கதா. 

பொதுவாக, வாய்வழி கதையாடல்- படக்கதை – நீதிக்கதை- நாவல் என்பதே இளமையிலிருந்து புனைவுலகை வந்தடையும் வாசகனின் பயணமாக இருக்கிறது. நீதிக்கதையிலிருந்து நாவலுக்கான தாவல் என்பது கொஞ்சம் அதிகமான தூரம்தான். அந்த இடைவெளியைக் குறைக்கும் விதமான இடைநிறுத்த படைப்புகள்தான் சிறார் இலக்கியம். நாவலின் அளவுக்கே வாழ்வின் விரிவையும் தரிசனத்தையும் சொல்லும் அவை அதே வேளையில் சிறார்களின் உலகத்திற்கு நெருக்கமாகவும் இருத்தல் வேண்டும், அத்தகைய படைப்புகளையே சரியான இடைநிறுத்தம் என்று கூறலாம். அவையே வாசிப்பின் திசையை முடிவு செய்யக்கூடியவை. 

சுயம் உருவாகும் தருணத்தில் வாசிக்கக் கிடைப்பவை நம்முடைய ரசனையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இதை என் அனுபவம் சார்ந்தே புரிந்துகொள்கிறேன். பதின்ம வயதில் நான் வாசித்த ஜோனாதன் லிவிங்ஸ்டன் எனும் கடற்புள்ளு கதை, மற்றும் தாகூரின் காபுலிவாலா கதை, இவ்விரண்டும் என் வாசிப்பின் திசையை தீர்மானித்தன என்றே இன்று கருதுகிறேன். 



தினமணி நாளிதழின் சிறுவர் சிறப்பு இணைப்பிதழாக வெளிவரும் சிறுவர்மணியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடராக வந்த கதைதான் ஜெயமோகன் எழுதிய பனிமனிதன். முன்னுரையில் இது சிறுவர்களுக்கான கதை எனினும் சிறுவர்களுக்கானது மட்டுமல்ல, வாழ்க்கை பற்றிய சில அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது என்பதால் பெரியவர்களும் வாசிக்கக் கூடிய கதை என்று எழுதுகிறார் ஜெ. உண்மைதான், ஒருவனது சுயமறியும் பயணம் இங்கிருந்து தொடங்கக் கூடும். அதற்கு அவன் அறிவியலையோ அல்லது ஆன்மீகத்தையோ தனக்கு துணையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடும்.

கதையில் மூன்று பாத்திரங்கள் காத்திரமான மூவகை போக்குகளின் குறியீடுகளாக எனக்கு புலப்பட்டனர். ராணுவ அதிகாரி பாண்டியன், டாக்டர் மற்றும் கிம். இதில் கிம்மும் டாக்டரும் தங்களது பாதையை தெளிவாக ஆன்மீகத்திலும் அறிவியலிலும் கண்டுகொண்டவர்கள். இவ்விரண்டு போக்குகளின் மீதும் ஐயம் கொண்டு அலைகழியும் பாண்டியன் மூன்றாவது வகை. 

பனிமலையில் பதியும் பிரம்மாண்டமான கால் தடம் பற்றி ஆராய அனுப்பப்படுகிறான் ராணுவ அதிகாரி பாண்டியன். அவனுடைய ஆய்வுக்கு உதவ முன்வருகிறார் ஆய்வாளர் டாக்டர் திவாகர். பனிமனிதன் தூக்கிச் சென்று காப்பாற்றி மீண்டும் விட்டுச் சென்ற சிறுவன் கிம்மை அழைத்துக் கொண்டு அவர்கள் பனிமனிதனை தேடி புறப்படுகிறார்கள். இக்கட்டான பயணங்களைக் கடந்து யதிகள் வாழும் அற்புத உலகை அடைகிறார்கள். மனிதனின் மகத்தான மூதாதையர்களைக் கண்டு கொள்கிறார்கள். மகிழ்ச்சியும் அமைதியும் மட்டுமே நிலவும் தர்மஸ்தலம் அது. அங்கிருந்து வெளியேறி. ஞானமடைந்த கிம் திபெத்திய மடாலயத்தின் மகாலாமாவகிறான்.

கிம் மகா லாமாவாகத் தேர்வடைந்த பிறகு டாக்டரால் அவனை வணங்க முடிகிறது, பாண்டியன் தயங்குகிறான். வைரக் கற்கள் அவனை முழுவதுமாக ஈர்க்கின்றன. டாக்டரும் கிம்மும் அவனை மீட்டு மேல் செல்கிறார்கள். குவியாடி போல் செயல்படும் பனிமூடிய  மலைச் சரிவுகளில் தனது பிரம்மாண்ட பேருருவைக் கண்டு திகைத்து நின்று விடுகிறான் பாண்டியன். மனிதர்களுக்கு தங்கள் பிம்பங்கள் மீதான காதல் அபாயகரமான எல்லைகளில் கூட விட்டுப்போவதில்லை போலும். தனது பிம்பத்தைப் போல் ருசியளிப்பது அவனுக்கு வேறெதுவும் இல்லை, பிம்பங்கள் ஒருநாளும் அவனுக்கு சலிப்பு ஏற்படுத்துவதில்லை.

சிறார் இலக்கியத்தின் மிக முக்கியமான அம்சம், அதன் கற்பனையும் கனவு அம்சமும் தான். குழந்தைகளின் பார்வையில் வாழ்வின் ஒவ்வொரு அசைவும் மகத்தான ஆச்சரியமாக, ஒரு அறிதலாக பரிணமிக்கும். இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு செயல்விதியும்ம் அதுவரை அது அறிந்தவற்றிலிருந்து வேறொன்றை அறிமுகப்படுத்தி ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் பண்டோரா பெட்டி. பொதுவாகவே ஜெயமோகனின் படைப்புகளில் மெய் நிகர் புலனனுபவங்கள் முக்கிய பங்களிப்பாற்றும். குறிப்பாக காட்சிப்படுத்துதல் அவருடைய மிகப்பெரிய பலம். இந்த கதையிலும் அவர் அதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். 

யதிகள் வாழும் காட்டுப்பகுதியும், அதில் வாழும் உயிரினங்களின் விவரணையும் அபார கற்பனை எழுச்சியில் உருவானவை என்பதை உணர முடிகிறது. கற்பனை என்பதைக் காட்டிலும் தன்னுடைய கனவுக்கு மொழி வடிவம் அளித்துள்ளார் என்றே தோன்றுகிறது. பெருச்சாளி அளவுக்கு இருந்துகொண்டு பிளிறும் யானைகள், கால்கள் கொண்டு மரம் மீது ஏறும் மீன்கள், நீருக்குள் மூழ்கி மேலெழும்பும் சீன ட்ராகன்கள், குரங்குக் கால்கள் கொண்ட பசுக்கள், எருமைகள் என ஒவ்வொரு சித்தரிப்பும் அபாரமான காட்சி அனுபவத்தை அளிக்கிறது. யாழி, ட்ராகன் என தொன்மங்களில் இருந்து சில உருவங்களை வடித்தாலும், பெரும்பாலும் கற்பனையில் உதித்தவைதான் அவைகள். பனி மலை மீது உறைந்திருக்கும் பாற்கடல், உறைகடலுக்கு அடியில் ஒரு அசைவில் உறைந்திருக்கும் அறிய கடலினங்கள், குழி ஆடியைப் போல் செயல்படும் பனி மலைச்சரிவுகள் என கதை முழுவதுமே காட்சிகளால் நிறைந்திருக்கிறது.

பிரபஞ்சத்தின் ஒவ்வொரு உயிரும் மற்றவைகளுடன் உறவு கொண்டுள்ளது எனும் நம்பிக்கையை அற்புதமாக அவதார் திரைப்படத்தில் சித்தரித்திருப்பார் காமரூன். இக்ரானை கட்டுப்படுத்தி, அதைப் பழக்கிய பிறகு அது வார்த்தைகளில் அடைபடாத மொழியில் அவனுடைய எண்ணத்தைப் புரிந்துக்கொண்டு இலக்கைச் சென்றடையும். பனிமனிதனில் வரும் வவ்வால் பயணம் ஏறத்தாழ இதே அனுபவத்தை நமக்களிக்கிறது. 

ஒன்றையொன்று அழித்து வாழாத, சார்ந்து வாழும் உயிரினங்கள் நிரம்பியதுதான் தர்மஸ்தலம். பேராசைகளும் நுகர்வு வெறியும் இறுக்கிப் பிசையும் சமூகத்தில் யதிகள் ஒரு கனவு. மீட்சிக்கான விதை. மனிதனுக்குள் ‘இன்னும் இன்னும்’ என்று எரியும் த்ருஷ்னை எனும் தீ அவனுடைய இனத்தையே கூண்டோடு அழித்துவிடும். ஊழிக்குப் பின்னர் மீண்டும் வேளாண்மை தொடங்க ஏதுவாக உயர்ந்த கோபுர கலசத்தின் உச்சியில் தானிய விதைகளைச் சேகரித்து வைப்பதுப் போல் தர்மஸ்தலத்தின் பனிமனிதன் வெளியுலக பார்வை படாமல் வாழ்ந்து வருகிறான் என்பதே லாமாக்களின் நம்பிக்கை.

கூட்டு நனவிலி பற்றிய பகுதிகளும், ஆழ்மனம் மேல்மனம் அடிமனம் ஆகியவற்றைப் பற்றிய விவாதங்களும் இந்தக் கதையின் மிக முக்கிய பகுதிகளாகும். உயிர்களின் ஆழ்மனம் பூமிக்கடியில் ஓடும் நெருப்பாறு போல் ஒட்டுமொத்தமாக இணைந்து ஒற்றை சரடில் ஓடிக் கொண்டிருக்கிறது. மேல்மனம் எரிமலையின் முகவாயாக ஆங்காங்கு தோன்றுகிறது. தனி மனங்கள் மறைந்து பூச்சிகளின் ஒற்றை பெருமனத்தில் இணைகிறது என்று விரிகின்றன இந்த விவாதங்கள். இங்கு, மேல்மனம் அற்ற ஆழ்மனம் மட்டுமே கொண்ட யதிகளே வரம் பெற்றவர்கள். 

பரிணாமவியல், உளவியல் சார்ந்த பல ஆழமான கேள்விகளை இப்படைப்பு எழுப்புகிறது. டார்வினை இளைஞர்களுக்கு கச்சிதமாக அறிமுகம் செய்கிறார் ஜெ. டீன் பறவைகள் ஏன் ஓநாயை மனிதர்களுக்கு காட்டிக் கொடுக்க வேண்டும் எனும் கேள்விக்கான விடை உயிரினங்களின் சார்புத்தன்மைக்கான ஆகச்சிறந்த விளக்கம். 

மனிதனின் பரிணாமத்தில் கரங்கள், குறிப்பாக கட்டைவிரல் ஏற்படுத்திய பங்களிப்பு ஆழமான சிந்தனைக்குரியது. யோசித்துப் பார்த்தால் நமது அத்தனை மகத்தான அறிவியல் பாய்ச்சல்களும் நமது கரங்களின் அமைப்பினால் மட்டுமே சாத்தியமானவை. சக்கரம், சிக்கி முக்கி கல் உரசி தீ உண்டாக்கியது முதல் விண்ணை முட்டும் கட்டிடங்கள் எழுப்பியதுவரை அனைத்துமே நம் கரங்களின் வல்லமையில் உருவானவைதான். பிற உயிரினங்களின் மீதான மேலாதிக்கம் தொடங்கியதும் அதிலிருந்துதான். கற்காலத்திற்குன் முற்கால  மனிதன் மிருகங்களை நேரடியாக வேட்டையாடினான், அதன் பின்னர் கற்கால மனிதன் கவட்டை, கூரிய கல் ஆயுதங்களைக் கொண்டு வேட்டையாடினான். 

எத்தனை அநீதியான முறை! அம்புகளும், ஈட்டிகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும், அணுகுண்டுகளும்! மறைந்திருந்து தூரத்தில் இருந்து தாக்கும் வல்லமையை இவை அவனுக்கு அளித்தன. இன்று அவன் வீட்டில் அமர்ந்தப்படி கணினியின் தொடுதிரையில் எதையும் அழித்துவிட முடியும். தன்னை அழிப்பவன் யார் எனும் அறிதல்கூட இன்றி உயிர்கள் கொத்துகொத்தாக மரித்துக் கொண்டிருக்கின்றன. ஒருவேளை நம் கரங்கள் பனிமனிதனது போல் இருந்திருந்தால், இப்படி கொத்துகொத்தாக பிற உயிர்களை அழித்திருக்க மாட்டோம் என்று தோன்றியது. கரங்கள் மனிதனின் ஆக்க சக்தியின் குறியீடு, அதுவே அவனது அழிவுக்கும் வழிவகுத்துவிடும் போலிருக்கிறது.   

கேளிக்கை – கற்பனாவாத எழுத்துக்களுடன் நின்றிடாமல் அங்கிருந்து மேலெழும்பி ஒரு ஆன்மீக தளத்தை தொடுவதே பனி மனிதனின் மிக முக்கிய அம்சம். சூரிய ஒளிபட்டு வெண்பட்டாக மிளிரும் பனிமலை புத்தரின் மனம், தூய்மையின் தூல வடிவம். மனிதன் இயற்கையின் பிரமாண்டத்திற்கு முன் நிற்கும்போது அவனுக்கு உதிக்கும் முதல் சிந்தனை அவன் யார் என்பதைக் காட்டிவிடும். பிரம்மாண்டத்தை எண்ணி புளகாங்கிதம் அடைந்து தன் சுயத்தின் சிறுமைகளை எண்ணிக் குறுகும் மனிதன் ஒருவகை, அந்த பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியை தனதாக்கி அங்கு புகை கக்கும் தொழில் கூடங்களை அமைத்து வேலியிட்டு உரிமை கொண்டாட நினைக்கும் மனிதன் மற்றொரு வகை. இவை இரண்டுமாக அல்லாமல், தர்மஸ்தலத்தின் விதவிதமான உயிரினங்கள் அனைத்தும் புத்தர் வரைந்த ஓவியங்கள் என அறிகிறான் கிம். செவ்வொளி பரவும் அந்திச் சூரியன் புத்தரின் சிரிப்பு. அஸ்தமித்த சூரியன் ஒடுங்கி அணைவது புத்தரின் உறக்கம். யதிகளின் கூட்டிசையில் தன்னையிழக்கும் கிம், தன்னையே அனைத்துமாகக் காண்கிறான். அகங்காரமும், தன்னிருப்பும் கரைந்து ஒரு ஆன்மீக அனுபவம் அவனுக்கு சாத்தியமாகிறது. இறுதியில் பத்மபாணி எனும் மகாலாமவாகிறான்.  

பேக்கர் பாணியிலான வீடுகள், கூட்டுறவுச் சமூகம் என காந்திய மாதிரியில் டாக்டர் திவாகர் வாழும் மலைகிராமத்தை உருவகித்துள்ளார் ஜெ. புத்தகம் முழுவதும் அறிவியலின் நடைமுறை பயன்பாடு பற்றி பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பானை வடிவிலான வீடுகள், கால்தடங்களைக் கொண்டு ஆராய்தல், போன்றவை மிகச்சிறந்த உதாரணங்கள். மாயாஜால கதை என்ற அளவில் நின்றுவிடாமல், அறிவியல் விட்டுச் செல்லும் இடைவெளிகள் கற்பனையைக் கொண்டு நிரப்ப்பப்பட்டிருக்கின்றன. வாசித்து முடிக்கையில் யதிகளின் உலகம் உண்மையாக இருக்க வேண்டும் என்று மனம் விரும்புகிறது.

நேரடி பிரச்சாரம் போல் அலுப்பூட்டுவது ஏதுமில்லை. பெரும்பாலும் அவை கவனிக்கப்படுவதில்லை. ஆனால் நேர்மையாக எழுதப்பட்ட புனைவு பிரச்சார நூல்களைக் காட்டிலும் வலிமை வாய்ந்தது. அது அவனுக்கு வாழ்க்கையின் சித்திரத்தை அதன் தீவிரத்துடன் காட்டிச் செல்கிறது. வன்முறையும் சுரண்டலும் சர்வ சாதாரணமாக மனிதர்களின் இயங்குவிதியாக முன்வைக்கப்படும் காலகட்டத்தில் பனிமனிதன் நமக்கு மாற்றுப்பாதையை காட்டுகிறான். இயற்கையுடன் போரிடுவதை நிறுத்தி இயைந்து வாழத்தொடங்குவதே மீட்சிக்கான வழி. ஏனெனில், மனிதன் பிரபஞ்சத்தில் வாழும் எத்தனையோ உயிரினங்களில் ஒருவன். அவன் பொருட்டு இப்பிரபஞ்சம் உருவாகவில்லை. அவன் பொருட்டு இது இயங்கவும் இல்லை. இனியும் தான் தேர்ந்தெடுத்த தவறான வாழ்க்கை முறையைத் தொடர்ந்தால், அவனையும் கடந்து செல்லும் இப்பிரபஞ்சம். 

நம் வீட்டு பிள்ளைகள் தவறவிடக்கூடாத புத்தகம்..



பனி மனிதன்

ஜெயமோகன்

தமிழ்

சிறார் இலக்கியம்

கிழக்கு