மீபத்தில் என் மகன் அஜிதனுடன் கலைக்கோட்பாடுகள் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தேன். ஒரு முதல்தரக்கலை எப்படியோ எதிர்மறை அழுத்தம் வழியாகப்பேசக்கூடியதாக ஆகிவிடுகிறது என்ற தன் தரப்பைச் சொல்லிக்கொண்டிருந்தான். சட்டென்று பனிமனிதனை நினைவுகூர்ந்தேன். அவனுக்கு எட்டுவயது இருந்தபோது, அவன் வாசிப்பதற்காக எழுதப்பட்ட நாவல் பனிமனிதன்.
இளமையிலேயே குழந்தைகளுக்கு நான் கதைகள் சொல்வதுண்டு. நான் வாசித்தவற்றைப்பற்றி அவர்களிடம் விவரிப்பதுண்டு. அனைத்தைப்பற்றியும் பேசுவேன். அது எனக்கொரு சவால். நான் புரிந்துகொண்டவற்றை அவ்வளவு எளிமையாக, அவ்வளவு குழந்தைத்தனமான உதாரணங்களுடன் சொல்லமுடியும் என்றால் எனக்கு அது சரியாகப் புரிந்துவிட்டது என்று பொருள். web of life என்பதை விளக்க ஒரு வண்ணத்துப்பூச்சி முட்டையிலிருந்து வெளிவருவதில் ஆரம்பித்து தொடர்ச்சியான கற்பனைநிகழ்ச்சிகள் வழியாக ஒன்றன்விளைவாக ஒன்றாக ஒரு காடு உருவாகி அது நகரமாவது வரை சொன்னதை இப்போது நினைவுகூர்கிறேன்.
அத்துடன் எனக்குப்பொதுவாக கதைகளின் உலகம்பிடிக்கும். நான் கதை எழுதுவதன் நோக்கம் பெரும்பாலும் நான் குதூகலமடைவதே. குழந்தைகளுக்கு கதைசொல்வதை இப்போதும் செய்துகொண்டிருக்கிறேன். சற்றுமுன்புகூட ஒரு திரைப்படத்தின் கதையை அஜிதனுக்குச் சொல்லிவிட்டு மேலே வந்து இதை எழுதுகிறேன். இப்போது அவனுக்கு வயது 21. கதைசொல்வது வழியாக நாங்களிருவரும் ஒரு புதுநிலத்துக்குச் சென்றோம். அங்கே வாழ்ந்து மீண்டோம்
கதைகள் வழியாக நாங்கள் சேர்ந்து வாழும் வெளியை அதிகரித்துக்கொண்டோம். வீடும் சாலைகளும் வயல்வெளியும் எல்லாம் எங்களுக்கு வாழக்கிடைத்த இடங்கள். பனிமலைகள், பள்ளத்தாக்குகள், மலையிடுக்குப்பாதைகள் வழியாக நாங்கள் கற்பனையில் வாழ்ந்தோம். வாழக்கிடைத்த இந்த வாழ்க்கையை பெரியதாக்கியபடியே சென்றோம். மேலும் அங்கே அன்னியர் இல்லை. நானும் குழந்தைகளும் மட்டுமே இருந்தோம். ஒருவரை ஒருவர் அந்தரங்கமாகப்புரிந்துகொண்டோம்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இலக்கியத்தின் வேலை இதுதானே என்ற எண்ணம் ஏற்படுகிறது. இலக்கியம் மனிதர்கள் இன்னும் விரிவான ஒரு வாழ்க்கையை இன்னும் அந்தரங்கமாக வாழ்வதற்காக உருவாக்கிக்கொள்வது மட்டும்தானே? நான் என் குழந்தைகளுடன் வாழ்ந்த அந்த அந்தரங்கவெளியில்தான் என் வாசகர்களும் நானும் சேர்ந்து வாழ்கிறோம். ஒருவரை ஒருவர் அறிகிறோம்.
பனிமனிதன் 1998 இல் தினமணி சிறுவர்மணியில் தொடராக வெளியாகியது.அன்று அதன் ஆசிரியர்பொறுப்பிலிருந்த என் நண்பரும் எழுத்தாளருமான மனோஜ் அதற்குக் காரணமாக அமைந்தார். அப்போது அனேகமாக ஒவ்வொரு வாரமும் அக்கதையை வாசித்து இளம்வாசகர்கள் எழுதிய கடிதங்கள் பிரசுரமாயின. ஓர் எழுத்தாளனாக எனக்கு உடனடி எதிர்வினைகள் வந்தது அதற்காகவே. அந்த உற்சாகத்தை இன்றும் நினைவுகூர்கிறேன். அன்றும் இன்றும் வாசிக்கும் சிறுவர்களின் கற்பனையைத்தூண்டும் நாவலாகவே இது உள்ளது.
பனிமனிதனை எழுதும்போது உற்சாகமான, துடிப்பான ஒரு சாகச உலகை உருவாக்கவேண்டுமென்பதே என் எண்ணமாக இருந்தது. ஆனால் வழக்கம்போல என்னுடைய தத்துவத்தேடல் அதிலும் ஊடுருவியது. உச்சத்தில் அது எதிர்மறை அழுத்தம் வழியாகவே தன் தரிசனத்தைப் பேசுகிறது. பேரிலக்கியங்கள் மீதான என் ஈர்ப்பின் விளைவென்றே அதை நினைக்கிறேன்
குழந்தைகளுக்கான இந்நாவலை குழந்தைகளும் பெரியவர்களும் வாசிக்கலாம். குழந்தைகள் அடையும் உற்சாகத்தை பெரியவர்களும் அடையலாம். இதன் புதிய பதிப்பை வெளியிடும் நற்றிணை பதிப்பகத்துக்கு நன்றி
ஜெ
[நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் பனிமனிதன் புதிய பதிப்புக்கான முன்னுரை]
No comments:
Post a Comment