மதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
சங்க சித்திரங்கள் என்ற தங்களின் புத்தகத்தை படித்த பிறகு உங்களின் மற்ற புத்தகங்களை தேடித்தேடி வாங்கி உங்களின் எழுத்துகளுக்கு பரம இரசிகனாகிவிட்டேன். பின்தொடரும் நிழலின் கதை மற்றும் கன்னியாக்குமரி போன்ற புத்தகங்கள் மட்டுமே பாக்கி. அதையும் 2010 புத்தக கண்காட்சியில் வாங்கிவிடுவேன்.
ஆனால் உங்கள் புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது என சொன்னால் பனி மனிதன் என்ற நூல்தான். விஷ்ணுபுரம் படித்துவிட்டு இப்படி சொல்ல ஒருமாதிரியாக இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது பனி மனிதன். பனி மலையில் சாகசம் என்றில்லாமல் ஏராளமான தகவல்களை அழகாக கோர்த்து அற்புதமாக எழுதியிருப்பீர்கள்.
ஒரு பயணத்தின் போது தொலைந்து போய்விட்டதால் மீண்டும் வாங்க முயற்சித்தும் முடியவில்லை. கவிதா-வில் இருப்பு இல்லை என்றே சொன்னார்கள். நல்லவேளை, கிழக்கு பதிப்பகத்தால் மீண்டும் வெளியிடப்படுகிறது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இதற்காகவே இந்தமுறை சென்னை புத்தக கண்காட்சிக்கு வருகிறேன்.
ஆறுகழுதை வயதானபிறகே பனிமனிதனை நான் படித்திருக்கிறேன். ஒருவேளை சிறு வயதில் அதை படித்திருந்தால் அது கொடுத்திருக்கும் மனஎழுச்சி என்னவென்று கற்பனை செய்திருக்கிறேன். புத்தகங்கள் யாரும் வாங்குவதில்லை என வருத்தப்பட்டிருந்தீர்கள். எப்படி வாங்குவார்கள்? கடிமனான தமிழ் உரைநடையை படித்த பிறகு, கல்லூரிக்கு சென்ற பிறகு ஆங்கில மொழியின் இலகுவான நடையை பார்த்து ஆங்கில நாவல்களை படிப்பதே சிறந்தது என்ற மன முதிர்ச்சிக்கு நிறைய பேர் வந்து விடுகிறார்கள்.
ஆங்கிலத்தில் இயற்கை வர்ணணைகள் பற்றிய கவிதைகளை படிக்கின்ற பொழுதில் தமிழில் நான் ‘பல்லை படபடவென கடித்தானய்யா ராஜா தேசிங்கு’ என தமிழ் கவிதைகளை படித்திருக்கிறேன். தேசிங்கு ராஜனை பற்றிய அப்போது எங்களுக்கு தெரிந்தவை எல்லாம் கோபம் வந்தா அவரு பல்லை கடிப்பாரு என்ற வரலாற்று சிறப்பு மிக்க தகவல்தான். அதற்கப்புறம் சொற்கொண்டல், பாவரசு, நாவரசு, தமிழ்புயல் என பட்டம் வாங்கியவர்களால் எழுதப்படும் உரைநடை. தினத்தந்தி புகழடைந்ததற்கு காரணம் இவர்கள்தான்.
சித்திரக்கதைகள் மூலமாகவே உண்மையான வாசிப்பு ஆரம்பித்தது. சிறுவர் இதழ்களும் சிறிய அளவில் முயற்சி எடுத்தன. உண்மையான வாசிப்பை சிறுவர்களிடமிருந்துதான் ஆரம்பிக்க வேண்டுமென்பது என்னுடைய எண்ணம். மிகக் கடுமையான நிபந்தனைக்கு பிறகு நான் படிக்கக் கொடுத்த பனி மனிதனை என்னுடைய கஸின்கள் மிகவும் விரும்பி படித்தனர்.
உங்கள் புத்தகங்களில் மிகவும் இருட்டடிப்பு செய்யப்பட்டது இது என கருதுகிறேன். இவரா எழுதினார் இது என்கின்ற ரீதியில்தான் பார்க்கின்றார்கள். கதை அடுத்த பாகத்தில் தொடரும் என்ற வகையில் முடித்துள்ளீர்கள். உங்களுக்கு நேரமிருப்பின் சிறுவர் இலக்கியம் தொடர்பாக படைப்புகளை உருவாக்குவது பற்றி தயவு செய்து யோசியுங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மிக்க அன்புடன்
ஜோஸப் மணி
அன்புள்ள ஜோசப் மணி
பனிமனிதன் கவிதா பதிப்பக வெளியீடாக வந்தது. அவர்கள் நூலகங்களை மட்டுமே நம்பி வெளியிடுபவர்கள். ஆகவே நூல் பரவலாக கவனிக்கப்படவில்லை. மறுபதிப்பும் வரவில்லை. இப்போது கிழக்கு போடுவதனால் வாசகர்களிடம் சென்று சேரும் என் நினைக்கிறேன்.
ஜெ
ஜெ
No comments:
Post a Comment